மதுரை:அரசியல் கட்சி துவங்குவதாக நடிகர் ரஜினி அறிவித்தது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொது மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஜினியின் ஆன்மிக அரசியல் நாளை அரசாளும் என அவரது ரசிகர்கள் உற்சாகமுற்றனர்.
புதுமையான அரசியல் உருவாகும்
முத்துமணி, 60, ரஜினி மக்கள் மன்ற கவுரவ ஆலோசகர், மதுரை:
ரஜினி வில்லனாக நடித்த காலத்தில் 1976 பிப்., 10 ல் மதுரையில் கவர்ச்சிவில்லன் ரஜினி நற்பணி மன்றம் துவங்கியவன். அன்று முதல் அவரது ரசிகராக இருப்பதுடன், சமூக அக்கறையை நான் கவனித்து வருகிறேன். சிறிய வயதில் கஷ்டப்பட்டவர் என்பதால் மற்றவர்களுடைய கஷ்டம் அவருக்கு தெரியும். யாரையும் புண்படுத்த மாட்டார். அதனால் தான் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக அவரால் உயரமுடிந்தது. அரசியலிலும்உச்சம் தொடுவார். நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தால் தான் நதிநீர் இணைப்புக்கு ரூ.ஒரு கோடி வழங்குவதாக அறிவித்தார். இலங்கை தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்தார். என்னை வைத்து சம்பாதிக்க நினைக்க கூடாது என ரசிகர் மன்றத்தினருக்கு உத்தரவிட்டு வருகிறார். இதிலிருந்து கட்டாயம் ரஜினி அரசியல் ஊழல் இல்லாத, எளிமையான, புதுமையானதாக இருக்கும்.
மத்தியில் போல மாநிலத்திலும் மாற்றம்
பிரான்சிஸ் பாஸ்டின், 59, தென்மாவட்ட ரஜினி மன்ற முன்னாள் ஒருங்கிணைப்பாளர்:
முப்பதாண்டுகளாக தமிழகத்திலுள்ள தாய்மார்கள் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என காத்திருந்தனர். அந்தளவுக்கு சினிமாவில் மட்டுமின்றி நிஜவாழ்க்கையிலும் ரஜினி சிறந்த மனிதர். ஆன்மிகவாதி. முப்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் நிலவரங்களை பார்த்து தான் சிஸ்டமே சரியில்லை என வெளிப்படையாக பேசினார். அவர் அரசியல், ஆட்சிக்கு வந்தால் ஊழல் இருக்காது. அரசியல், அரசு கட்டமைப்புகளும் மாறும். எல்லோருமே அவரை ஏற்று கொள்வர். மாற்றம் வேண்டும் என நினைப்பவர்கள் அவரை ஆதரிப்பது உறுதி.
கடைசி நம்பிக்கை ரஜினி
பாக்யா, 39, குடும்பத்தலைவி, தவிட்டுச்சந்தை:
சிறுவயதிலிருந்து ரஜினி ரசிகை. கணவர் பழனிகுமார் மன்றத்தில் பொறுப்பில் இருக்கிறார். ரஜினி எதையும் வெளிப்படையாக பேசிவிடுவார். சொன்னால் செய்யாமல் இருக்க மாட்டார். 2017 ல் அறிவித்தபடி அவர் கட்சி துவங்கப்போவதாக அறிவித்திருக்கிறார். முப்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு மாற்றாக ரஜினியின் கட்சி இருக்கும். தமிழக மக்களின் கடைசி நம்பிக்கை ரஜினி. அந்தளவுக்கு அவர் வித்தியாசமான வெளிப்படையான ஆட்சியை தருவார். தேர்தலில் பெண்கள், இளைஞர்கள் ஓட்டு ரஜினிக்காக தான் இருக்கும்.
ஜாதி, மத பேதம் இருக்காது
அழகர், 48, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணை செயலாளர், பெத்தானியாபுரம்:
எங்களுடைய முப்பதாண்டு எதிர்பார்ப்பை ரஜினி இன்று பூர்த்தி செய்திருக்கிறார். காமராஜர், எம்.ஜி.ஆர்., போல ரஜினி வரும் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்பது உறுதி. ஆட்சி, அதிகாரத்திற்கு வர ரஜினி விரும்பியிருந்தால் 1996 ல் வந்திருப்பார். எங்களிடம் கூட முதலில் வீடு, பிறகு நாடு, அப்புறம் தான் மன்றம் என அடிக்கடி கூறுவார். அவரது பிறந்த நாளில் கூட விளம்பரமின்றி நற்பணிகளை செய்ய வேண்டும் என்பார். எனவே அவரது ஆன்மிக அரசியலில் ஜாதி, மத பேதம் இருக்காது. தெய்வீகமும், தேசியமும் தான் இன்றைக்கு தேவை.அதை ரஜினியின் ஆன்மிக அரசியல் தரும்.
தமிழகத்திற்கு நல்லது நடக்கணும்
அரவிந்த், ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர், திண்டுக்கல்:
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ரஜினியிடம் உங்கள் உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள். உங்களது உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ, குடும்பத்தினருடன் கலந்து பேசி அதன்படி நடந்துக் கொள்ளுங்கள் என்று சொன்னோம். ஜனவரியில் கட்சி துவங்குவது பற்றிய அவரது அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். அவர் உடல் நலத்துடன் நலமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கும் நல்லது நடக்க வேண்டும். சினிமா, அரசியல் இரண்டும் வெவ்வேறு உலகம். அரசியலில் நேர்மை, நியாயம், உண்மையை பாலிசியாக கொண்டு தனித்துவமாக செயல்பட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE