நாகர்கோவில்:''இயற்கையை கையாளுவதில் முதல்வர் பழனிசாமி புதிய இலக்கியம் படைத்து வருகிறார்'' என வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் கூறினார்.
புரெவி புயல், கனமழை முன்னெச்சரிக்கை குறித்து குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை, புயலை எதிர்கொள்ள 36 வருவாய் மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் ஒரு வாரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பிரதமர் நேற்று பாராட்டு தெரிவித்தார். மருத்துவ வசதிகளுடன் உதவ கப்பல் படை தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.புயலால் மக்கள் அச்சப்பட தேவை இல்லை. முகாம்கள் தயாராக இருக்கின்றன. மல்பே, கோவா, ரத்தினகிரி, ஹவ்காத்தி, லட்சத்தீவு, மும்பை ஆகிய இடங்களில் 106 படகுகள் கரை ஒதுங்கி இருக்கின்றன.
தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட சேட்டிலைட் போன் போன்று வேறு மாநிலங்களில் கொடுக்க வில்லை. ஒக்கி புயலில் குத்தகை விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு கிடைக்கவில்லை என்கிறார்கள். பதிவு செய்தவர்களுக்கு தான் நிவாரணம் வழங்கப்படும். அரசு ஆவணங்கள் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
முகாம்களில் எத்தனை பேர்
துாத்துக்குடியில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்அமைச்சர் உதயகுமார் கூறுகையில், ''தென்மாவட்டங்களில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 82 பேர் தங்குவதற்கு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் உபரிநீர் வெளியேற்ற அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப் பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் 7505 குளங்களில் 985 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. கடலுக்கு சென்ற மீனவர்கள் திரும்பி விட்டனர்'' என்றார். திருநெல்வேலி, தென்காசியிலும் அதிகாரிகளுடன், உதயகுமார் ஆலோசனை நடத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE