பந்தலுார்;பந்தலுார் சேரங்கோடு ஊராட்சியில் யானை வழித்தடத்தில் மலை போல் குவிந்துள்ள 'பிளாஸ்டிக்' கழிவுகளால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பந்தலுார் அருகே, அய்யன்கொல்லி, விவசாய விளைபொருட்கள் பதப்படுத்தும் கூடத்தின் அருகே, சேரங்கோடு ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.'இந்த குப்பையின் மீது, மண் போட வேண்டும்,' என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், திறந்த வெளியில் குப்பை கொட்டி வரும் நிலையில், ஈக்கள் அதிகரித்தும், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.மேலும், இந்த பகுதி யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளதுடன், சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளும் அதிகளவில் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது. இங்குள்ள குப்பை கழிவு; பிளாஸ்டிக் போன்றவற்றை விலங்குகள் உட்கொள்வதால், பல்வேறு நோய்கள் ஏற்பட்டு, அவைகள் பலியாகி வருகின்றன.தற்போது, இதனருகே அதிரடிப்படையினர் முகாம் மற்றும் குடியிருப்புகள் அமைய உள்ள நிலையில், பாதிப்பு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, வன விலங்கு ஆர்வலர்கள் புகார் அளித்தும், வனத்துறையினர் கண்டு கொள்ளவில்லை.இப்பகுதியில், பந்தலுார் தாசில்தார் மகேஷ்வரி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், 'உடனடியாக குப்பையை குழி தோண்டி புதைக்கவும், திறந்தவெளியில் கொட்டுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமீறல் தொடர்ந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE