பல்லடம்:இணை ஆணையர்கள் நியமனம் செய்வது நிதியை வீணடிக்கும் செயல் என, கோவில் பூசாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு விடுத்துள்ள அறிக்கை:தமிழகம் முழுவதும், 9 இணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டு, ரூ.9 கோடி செலவில் இணை ஆணையர். அலுவலகங்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போதுள்ள, 11 இணை ஆணையர்களின் கட்டுப்பாட்டில், 5 ஆயிரத்துக்கும் குறைவான கோவில்களே உள்ளன.மீதமுள்ள, 35 ஆயிரம் கோவில்கள் மாவட்ட உதவிய ஆணையர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. 500க்கும் குறைவான கோவில்களை மட்டுமே தற்போதுள்ள இணை ஆணையர்கள் நிர்வகித்து வருகின்றனர். இவற்றால் பெரிய வேலைப்பளு என்று எதுவும் கிடையாது.இப்போது, புதிதாக, 9 இணை ஆணையர், மற்றும் உதவி அலுவலர்களை நியமிப்பது என்பது நிதியை வீணடிப்பதாக உள்ளது. மேலும் இவர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கு அரசு நிதி கிடையாது. கோவில் வருமானத்தின் மூலமே இதற்கான செலவுகள் செய்யப்பட வேண்டும்.இதனால், கோவில் வருமானத்திலிருந்து தேவையற்ற செலவுகளே ஏற்படும். ஒரு கால பூஜையும் செய்ய முடியாத நிலையில் எண்ணற்ற கிராம கோவில்கள் உள்ளன. இதுபோன்று நிதியை வீணடிக்காமல் கிராம கோவில்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE