திருப்பூர்:பூத் கமிட்டிக்கான பணிகள், 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், மீண்டும் புதிய உறுப்பினர்களை சேர்க்க ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆயத்தமாகியுள்ளனர்.ரஜினிகாந்த் அரசியல் கட்சியை துவங்குவதாக, நேற்று அறிவித்தார்.
வரும், ஜன., மாதம் கட்சி துவக்கம், தேர்தலில் போட்டி என பல்வேறு அறிவிப்புகள் வெளியானதால், அவரின் ரசிகர்கள் சுறுசுறுப்பாகி உள்ளனர். அவ்வகையில், திருப்பூர், அவிநாசி ரோட்டிலுள்ள, பெரியார் காலனியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நேற்றிரவு நடந்தது.கூட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் மேகநாதன், தலைமை வகித்தார். ஏற்கனவே பூத் கமிட்டிக்கான பணிகள், 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், மீண்டும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது; ஒன்றிய நகர பேரூராட்சி நிர்வாகிகளை நேரில் சந்திப்பது; ரஜினி பிறந்தநாளை 'எழுச்சிநாளாக' கொண்டாடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணை செயலாளர்கள் ராம்குட்டி, ராஜ்குமார், சந்துரு, மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் ஸ்ரீதர், துணை செயலாளர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிவகுமார், இணை செயலாளர் ஜவகர், இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரபு, உட்பட அவிநாசி, பல்லடம், பொங்கலுார் மற்றும் திருப்பூர் ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE