கை நழுவி கடலில் விழுந்தவர்
இளைஞர் ஒருவர், தன் நண்பர்களுடன் சேர்ந்து சிறிய கப்பலில் பயணம் செய்கிறார். அப்போது, ஜாலியாக நடனம் ஆடுகின்றனர். பின்னர், கெத்து காட்டுவதற்காக, அந்த இளைஞர் அங்குள்ள கம்பியை பிடித்து தொங்கி சாகசம் செய்ய முயல்கிறார். ஆனால், கம்பியை பிடித்ததும், கை நழுவி கடலில் விழுந்து விட, நண்பர்கள் அனைவரும் அவரை பார்த்து கைதட்டி சிரிக்கின்றனர். மொபைல் போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.
இதெல்லாம் ரொம்ப ஓவர்!
முதியவர் ஒருவர் செம்மண் நிறைந்த பகுதியில் குழி தோண்டும் பணியில் ஈடுபடுகிறார். பின்னர், களைப்புடன் அங்கு குழி தோண்டிக் கொண்டிருக்கும் பொக்லைன் இயந்திரத்தின் அருகில் சென்று நிற்கிறார். தொடர்ந்து, அவர் குனிந்தபடி நிற்க, இயந்திரம் அவருக்கு முதுகு சொறிந்து விடுகிறது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் சிரித்து மகிழ்கின்றனர். வலைதளங்களில் வைரலாகும் இந்த காட்சியை கண்டு நெட்டிசன்கள் பலரும், 'இதெல்லாம் ரொம்ப ஓவர்' என, கமென்ட் அடித்துள்ளனர்.
சுறாவுடன் விளையாட்டு
ஐரோப்பாவில் உள்ள மால்டா தீவு, நீர் விளையாட்டுக்கு புகழ்பெற்ற சுற்றுலா தலம். இங்குள்ள தேசிய மீன் காட்சியகத்தில் ஒரு பெரிய மீன் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கடலில் இருப்பதை போலவே, கடல் தாவரங்கள் வைத்து, பெரிய கடல் மீன்களோடு அமைக்கப்பட்டுள்ளது இந்த நீர் தொட்டி. இந்நிலையில், கிறிஸ்துமஸ் நெருங்குவதை ஒட்டி, சாண்டா கிளாஸ் வேடமணிந்த ஒருவர் நீர் மூழ்கி சாதனங்களை அணிந்து கொண்டு, அங்குள்ள மீன்களுக்கு உணவளிக்கிறார். அப்போது, பெரிய சுறா மீனை தட்டி விளையாடிக் கொண்டே உணவளிக்கிறார். இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி, பலரையும் கவர்ந்துள்ளது.
வழிகாட்டிய நாய்
சீனாவின், ஷடாங் மாகாணத்தில் வீட்டு கம்பி வேலிக்குள் நுழைய முயன்ற குட்டி நாய் ஒன்று எதிர்பாராத விதமாக சிக்கி கொண்டது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர், அங்கு வந்த தீயணைப்பு வீரர்களை நாய்குட்டியின் தாய் வேகமாக அழைத்துச் சென்றது. அதன்பின் கம்பியை வெட்டியெடுத்து தீயணைப்பு துறையினர் குட்டி நாயை பத்திரமாக மீட்டனர். மனதை நெகிழவைக்கும் இந்த காட்சி, வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE