பொள்ளாச்சி:''ஆழியாறு உட்பட, ஆறு மையங்களில், 'தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள்' என்ற, முதுநிலை பட்டய படிப்பு துவங்கப்படும்,'' என, வேளாண் பல்கலை தொலைதுார கல்வி இயக்குனர் ஆனந்தன் தெரிவித்தார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்ககம் சார்பில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆழியாறு நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், 'தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள்' என்ற முதுநிலை பட்டய படிப்பு துவக்க விழா நடந்தது.
வேளாண் பல்கலை தொலைதுார கல்வி இயக்ககம், இணைப்பு பேராசிரியர் ராஜமாணிக்கம் பேசுகையில், ''இந்த பட்டய படிப்பில், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்களில், தாய் மரம் தேர்ந்தெடுக்க வழிமுறைகள், கலப்பின ரகம் பயிர் செய்தல், மகசூல் தரககூடிய கலப்பின ரகம், தென்னையில் உரம், நீர், களை மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்படும்,'' என்றார்.
தோட்டக்கலைத்துறை முதல்வர் புகழேந்தி தலைமை வகித்து பேசுகையில், ''இந்த பட்டய படிப்பில், ஐ.டி., மற்றும் பொறியியல் பட்டதாரி மாணவர்கள் சேர்ந்துள்ளனர். விவசாயத்தில், தொழில்நுட்பங்களை புகுத்தி சாதனை படைக்கலாம்,'' என்றார்.
தொலைதுார கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண் பல்கலை இயக்குனர் ஆனந்தன் பேசுகையில், ''ஆழியாறு உட்பட, கோவை வேளாண் பல்கலை, பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி மையம், திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் மையம், வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் என, ஆறு மையங்களில், முதுநிலை பட்டய படிப்பு துவங்கப்படும்,'' என்றார்.ஆழியாறு நகர் தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பிரணிதா நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE