ஐதராபாத் : மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கக் கோரி வெளிநாடு வாழ் தெலுங்கு அமைப்பினர் கையெழுத்து இயக்கம் துவங்கியுள்ளனர்.
கடந்த 1991 - 96 வரை இந்திய பிரதமராக பதவி வகித்தவர் காங்கிரசைச் சேர்ந்த பி.வி.நரசிம்மராவ். சில மாதங்களுக்கு முன் இவரது நுாற்றாண்டு விழாவை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் மிக எளிமையாக கொண்டாடின. கடந்த 2004ல் மறைந்த இவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வெளிநாடு வாழ் தெலுங்கு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக மைத்ரி இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் கீழ் 81 அமைப்புகள் உலகம் முழுதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றன. சேகரிக்கப்பட்ட கையெழுத்து பிரதிகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இது குறித்து மைத்ரி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர் பிரசாத் ஸ்வர்ணா கூறும்போது'' நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆதரவு திரட்டும் நோக்கில் 'யூடியூப்' சேனல் 'பேஸ்புக்' பக்கம் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன'' என்றார்.நரசிம்மராவின் சாதனைகளை விளக்கி 'டிவி' நிகழ்ச்சிகள் கலை விழாக்கள் ஆகியவை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE