மதுரை : மதுரை வைகை ஆற்றில் இருந்து பனையூர் கால்வாய் வழியாக திறக்கப்படும் நீரால் மாரியம்மன் தெப்பம் வேகமாக நிரம்புகிறது. அங்கு மிதக்கும் குப்பையால் தெப்பத்தின் புனிதம் கெடுகிறது.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்காக வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் வெள்ளம் செல்கிறது. மதுரை ஏ.வி.பாலம் அருகேயுள்ள தடுப்பணையில் இருந்து மாரியம்மன் தெப்பத்திற்கு நவ.,29 முதல் தண்ணீர் திருப்பப்பட்டுள்ளது. முதலில் வினாடிக்கு 51 கன அடி வரை சென்றது. பின்னர் நீர்வரத்து அதிகரித்ததால் தெப்பம் வேகமாக நிரம்பி வருகிறது. 4 நாட்களில் பகுதியளவு நிரம்பிவிட்டது. இன்னும் ஒரு வாரத்திற்குள் தெப்பம் முழுமையாக நிரம்பிவிடும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே பனையூர் கால்வாயில் அடித்து வரப்பட்ட குப்பை, ஏற்கனவே தெப்பத்திற்குள் வீசப்பட்ட பிளாஸ்டிக் கேன் போன்ற கழிவுகள் நீரின் மேற்பரப்பில் மிதக்கின்றன. இதனால் தெப்பத்தின் புனிதம் கெடுகிறது. நீரும் மாசடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE