மதுரை : மதுரைக்கு நேற்றிரவு வந்த முதல்வர் பழனிசாமிக்கு அ.தி.மு.க.,வினர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். இன்று (டிச.,4) ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தை திறந்து, பெரியாறு அணை குடிநீர் திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்கிறார்.
ஈரோட்டிலிருந்து வந்த முதல்வருக்கு மாவட்ட எல்லையான தனிச்சியம் பிரிவில் அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் சார்பில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.
பரவையில் அ.தி.மு.க., நகர் மாவட்டம் சார்பில் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். சொக்கிகுளத்தில் அ.தி.மு.க., புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகளும் முதல்வரை வரவேற்றனர்.
இன்று காலை 9:00 மணிக்கு மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.30.19 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் திறக்கிறார். ரூ.1295 கோடியில் பெரியாறு அணையிலிருந்து நேரடியாக குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை துவக்குகிறார். மண்டல புற்றுநோய் மையம் மற்றும் ரூ.39 கோடியிலான முடித்த திட்டங்களை திறந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
பின் சிவகங்கையில் நடக்கும் கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார். மாலை அங்கிருந்து புறப்பட்டு இரவு மதுரை வந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். புரெவி புயலால் அதிகனமழை பெய்தால் அப்பகுதிகளை முதல்வர் பார்வையிடவும் வாய்ப்பு இருப்பதாக அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE