திருவனந்தபுரம்: 'புரெவி' புயல் கேரளாவில் இன்று(டிச.,4) கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதை அடுத்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் நேற்று நடத்தினார்.
தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'புரெவி' புயலாக உருமாறி இலங்கையின் திரிகோணமலை அருகே நேற்று முன் தினம் கரையை கடந்தது. இந்த புயல் கேரளாவில் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த எட்டு குழுவினர் கேரளா சென்றடைந்தனர். கடல் மற்றும் மலைப்பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.மாநில அரசு 217 நிவாரண முகாம்களை ஏற்படுத்தி உள்ளது. ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் 16 ஆயிரம் பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அசாதாரண சூழ்நிலைகளை சமாளிக்க கோவை சூலுாரில் உள்ள விமான படை தளத்தில் விமானப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் நிவாரண பணிகள் தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் நேற்று நடத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE