மதுரை : 'தமிழகத்தில் முதல்வர் பழனிசாமியால் மும்மாரி பொழிகிறது' என அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.
முல்லைப்பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு ரூ.1295.76 கோடியில் குடிநீர் கொண்டுவரும் திட்டத்திற்கு இன்று(டிச.,4) முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். இவரை வரவேற்கும் விதமாகவும், குடிநீர் திட்டம் பற்றி மக்கள் தெரிந்து கொள்ளவும் தமுக்கம் மைதானத்தில் முல்லைப்பெரியாறு அணையின் பிரமாண்ட மாடல் தோற்றம் நிறுவப்பட்டுள்ளது.
இதை பார்வையிட்ட அமைச்சர் செல்லுார் ராஜூ கூறியதாவது: அமைச்சர்கள் முன்னிலையில் இக்குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டம் நமக்கு மட்டுமின்றி சந்ததிக்கும் பயன் தரும். நல்லவர் ஆட்சியில் மும்மாரி பொழியும் என்பர். அதற்கு எடுத்துக்காட்டாக முதல்வர் பழனிசாமியின் ஆட்சியில் நன்றாக மழை பெய்கிறது.
எதிர்க்கட்சிகளால் எவ்வித குறையும் தெரிவிக்க முடியவில்லை. மதுரை வரும் முதல்வருக்கு நகரில் 20 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படும். புயல், மழைக்காலங்களில் தட்டுப்பாடு இன்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம். கூடுதல் பொருட்களை இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE