மதுரை, : மதுரை பனையூர் கால்வாயில் கழிவுகளை அகற்றி, தெப்பக்குளத்தில் வைகை நீரை தேக்க மாநகராட்சி கமிஷனர் உடனடி நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
வைகை ஆறு உட்பட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீர் வரத்தை சரி செய்ய வேண்டும். நீர்நிலைகளை ஆழப்படுத்தி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பல்வேறு மனுக்கள் தாக்கலாகின. இதன்படி தென்மாவட்ட நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் எல்லைகளை வரையறுக்க 2018 லிருந்து நீதிமன்றம் அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. இவ்வழக்குகளில் நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட நடுநிலை அறிவுரையாளர் மூத்த வழக்கறிஞர் வீரகதிரவன்: வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றவில்லை. மதுரை மாநகராட்சி பகுதியிலுள்ள 7 கால்வாய்கள் மூலம் கழிவுநீர் வைகையில் கலக்கிறது. இதனால் வைகை மாசடைந்துள்ளது.
மாசடைந்த வைகை நீரைத்தான் பரமக்குடியில் குடிநீராக பயன்படுத்த வேண்டிய பரிதாப நிலை உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை பனையூர் கால்வாயில் கழிவுகளை அகற்றி, வைகை நீரை தெப்பக்குளத்தில் தேக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பனையூர் கால்வாயில் கழிவுகள் தேங்கியுள்ளன. தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து உள்ளது. இச்சூழலில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்றார்.
நீதிபதிகள்: பனையூர் கால்வாயில் கழிவுகளை அகற்றி, தெப்பக்குளத்தில் வைகை நீரை தேக்க மாநகராட்சி கமிஷனர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். டிச.,7ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE