சென்னை: ரஜினி துவக்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி(60) புதுக்கோட்டையை சேர்ந்தவர்; தொழில் அதிபர். ஆரம்பத்தில் உணவு பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டார்.
அதன்பின் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான தொழிலில் இறங்கினார். மத்திய மாநில அரசுகளின் திட்டங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்துள்ளார். அவரது மறைவுக்கு பின் பா.ஜ.வில் இணைந்தார். தமிழக பா.ஜ. அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தார்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் மாமா வீட்டில் சம்பந்தம் செய்தவர். இவரது மனைவி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமனின் பள்ளித்தோழி. பா.ஜ. தலைமையுடன் நெருக்கமாக இருந்து வந்தார். தற்போது அவர் ரஜினியுடன் இணைந்துள்ளார்.

இது குறித்து அர்ஜுனமூர்த்தி கூறுகையில் ''ரஜினி மிகப்பெரிய தலைவர். தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார். அதில் பங்கேற்கும் வாய்ப்பை தந்துள்ளார். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் ஏற்படப் போகிறது. அதற்கு பணியாற்றுவது ஆத்ம திருப்தியை கொடுக்கும்'' என்றார்.
பா.ஜ.வில் இருந்து விடுவிப்பு:
பா.ஜ.வில் இருந்து விலகுவதாக கட்சி தலைமைக்கு அர்ஜுனமூர்த்தி கடிதம் கொடுத்திருந்தார். அதை பா.ஜ. தலைமை ஏற்றது. 'கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்' என பா.ஜ. பொதுச்செயலர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE