கண்ணகி நகர்; சென்னை, கண்ணகி நகரில், முறையாக குடிநீர் வழங்காததால், எம்.எல்.ஏ.,வுடன் சென்ற குடிநீர் வாரிய அதிகாரிகளை, பகுதி மக்கள் முற்றுகையிட்டு, கேள்விகளால் துளைத்தெடுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை, கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய வளாகத்தில், 23 ஆயிரத்து, 703 வீடுகள் உள்ளன. ஒரு வீட்டுக்கு, 250 லிட்டர் வீதம், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இதில், 8,000 வீடுகளுக்கு, இரண்டு வீட்டுக்கு, 500 லிட்டர் கொள்ளளவு தொட்டி வீதம், 4,000 தொட்டி அமைத்து, குடிநீர் வழங்கப்படுகிறது.வினியோகம்மீதமுள்ள வீடுகளுக்கு, தெரு குழாய் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எழில் நகரில் உள்ள, 6,000 வீடுகளுக்கு, ஆறு மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. ஆறு நாட்களுக்கு ஒரு முறை தான் வினியோகம் நடக்கிறது.எழில் நகருக்கு மட்டும், ஒரு நாளைக்கு, 15 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால், குடிநீர் வாரியம், 10 லட்சம் லிட்டர் மட்டும் வழங்குவதால், அனைத்து வீடுகளுக்கும் பகிர்ந்து வினியோகிக்க முடியாமல், குடிசை மாற்று வாரியம் திணறுகிறது.இந்நிலையில், சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், நேற்று கண்ணகி நகர் பகுதியை பார்வையிட சென்றார். உடன், குடிநீர் வாரிய அதிகாரிகள், ஐந்து பேர் சென்றனர்.எழில் நகருக்கு சென்ற போது, பகுதி மக்கள், குடிநீர் வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு, 'ஏன் குடிநீர் முறையாக வினியோகம் செய்வதில்லை. வார்டு அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தால், நாங்கள் வருவதை அறிந்து, வார்டு பொறியாளர் ஏன் தலைமறைவாகிறார்' என, கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.நடவடிக்கைதொடர்ந்து, எம்.எல்.ஏ.,விடம் முறையிட்டனர். அவர், குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பேசி, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி, அங்கிருந்து நழுவினார்.பகுதி மக்கள் கூறியதாவது: நிலத்தடி நீரில் உப்பு கலந்துள்ளதால், அனைத்து தேவைகளுக்கும், வாரிய குடிநீரை தான் நம்பி உள்ளோம். ஒரு நபருக்கு, தினமும், 135 லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், நான்கு பேருக்கு, 250 லிட்டர் வழங்குகின்றனர். அதுவும், ஆறு நாட்களுக்கு ஒரு முறை வழங்குகின்றனர். ஆறு மாதத்திற்கு முன்பு வரை, முறையாக குடிநீர் வினியோகித்தனர். அதன் பின், வினியோகத்தை படிப்படியாக குறைத்தனர். கண்ணகி நகருக்கு வழங்க வேண்டிய குடிநீரை, இதர பகுதிகளுக்கு லாரி குடிநீராக வழங்கி பணம் வசூலிக்கின்றனர். புதிதாக இணைப்பு வழங்கிய பகுதிக்கு, குழாய் சோதனை ஓட்டத்திற்கும், எங்கள் பகுதிக்கு ஒதுக்கிய குடிநீரை பயன்படுத்துகின்றனர். உயர் அதிகாரிகள் தலையிட்டு விசாரித்தால், மண்டல குடிநீர் வாரிய அலுவலகத்தில் நடக்கும் பல மோசடிகள் வெளியே வரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE