புதுடில்லி: நாட்டின் பொருளாதாரம், ஆங்கில எழுத்தான, 'வி' வடிவ மீட்சியில் இருப்பதாக, மத்திய நிதியமைச்சகத்தின், மாதாந்திர பொருளாதார நிலை குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மைனஸ், 7.5 சதவீதமாக உள்ளது. இது, அதற்கு முந்தைய காலாண்டின், இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது கிடைப்பதாகும். இதுவே, கடந்த முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, 23 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.இது, 'வி' வடிவ மீட்சியாகும். நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவுடன் அப்படியே இருப்பதையே இது காட்டுகிறது.
ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சி விவசாயம், கட்டுமானம், தயாரிப்பு ஆகிய துறைகளின் பெரிய ஆதரவுடன் எட்டப்பட்டுள்ளது. சேவைகள் துறையும் வளர்ச்சிக்கு நன்கு உதவி செய்துள்ளது.பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடமும் நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

ராபி பருவத்தில்,வேலையாட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. காரிப், ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரித்து உள்ளது. இவை போன்ற காரணங்களால், வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். இருப்பினும், சவாலாக இருப்பது, கொரோனா இரண்டாவது கட்ட பரவல் ஒன்றுதான். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE