சேலம்: கோவை கோட்டத்தில், அரசு பஸ்களில், டீசலை மிச்சப்படுத்திய டிரைவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இத்திட்டத்தை, பிற கோட்டங்களிலும் செயல்படுத்த அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கழக டவுன் பஸ்களை, ஒரு லிட்டர் டீசலுக்கு, 5.5 கி.மீ., புறநகர் பஸ்களை, 6 கி.மீ., இயக்க, அதிகாரிகள், டிரைவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். அப்படி இயக்காதவர்களுக்கு, சென்னை மாநகரபோக்குவரத்துக்கழகம் உள்பட அனைத்து கோட்டங்களில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கோவை கோட்டத்தில், டீசலை மிச்சப்படுத்தும் டிரைவர்களை, பணிமனைக்கு, 10 பேர் வீதம் தேர்வு செய்து, அவர்களில், முதல் மூன்று பேருக்கு பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, கோவை ஓ.பி.ஆர்., பணிமனையில் ஈஸ்வரமூர்த்தி, ஒரு லிட்டர் டீசலுக்கு, 7.16 கி.மீ., பஸ்சை இயக்கி முதல் பரிசை பெற்றார். நடராஜன், 6.63 கி.மீ., இயக்கி இரண்டாம் பரிசையும், முருகேசன், 6.53 கி.மீ., இயக்கி மூன்றாம் பரிசையும் பெற்றனர். இவர்கள் தவிர, 6 கி.மீ.,க்கு மேல் இயக்கிய டிரைவர்களுக்கு, தொழிலாளர்கள் முன்னிலையில், கிளை மேலாளர் பரிசு வழங்கினார். இத்திட்டத்தை, சென்னை, சேலம், நெல்லை, கும்பகோணம், விழுப்புரம், எஸ்.இ.டி.சி., ஆகியவற்றில் செயல்படுத்த அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'டீசல் சிக்கனத்துக்கு பரிசு வழங்கும் திட்டம், 10 ஆண்டுக்கு முன் அமலானது. அதை யாரும், மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. தற்போது, கோவை கோட்டம் கொண்டு வந்துள்ளதால், எரிபொருள் செலவு குறைந்து, விபத்துகளும் தவிர்க்கப்படுகின்றன. இப்பரிசு திட்டத்தை, தமிழகம் முழுதும் அமல்படுத்த உள்ளோம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE