ஈரோடு: மாநில அரசின் எச்சரிக்கைக்கு இடையே, ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில், சுகாதாரத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி, பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர்.
சில மாவட்டங்களில் தீபாவளியின்போதும், அதற்கு பின்னும் சற்று உயர்ந்து வருவதுடன், இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், சேலம், ஈரோடு உள்பட, ஏழு மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமை செயலர் கடிதம் அனுப்பி, கொரோனா பாதிப்போர் எண்ணிக்கை, இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இது குறித்து, சுகாதாரத்துறையினர் கூறியதாவது: அரசின் எச்சரிக்கையால், கொரோனா பாதிக்கப்படுவோருக்கு, ஸ்கிரீனிங் பரிசோதனையை அதிகரித்து, அவர்களை கண்காணிக்கிறோம். குறைந்தபட்ச அவசியம் ஏற்பட்டால் கூட, அவர்களை பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று, கூடுதல் மருத்துவம், சுவாச கருவி பொருத்தி விரைவாக குணமடைய செய்வதுடன், இறப்பை தடுக்கிறோம். இதன் பயனாக கடந்த, 10 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் இறப்பு இல்லை. பாதிக்கப்பட்டோர், மூன்று முதல் ஐந்து நாட்களில் குணமடைந்து வருகின்றனர். அதிக பாதிப்பு உடையவருக்கு, கூடுதலாக ஒரு வாரம் வரை சிகிச்சை வழங்கி, வீட்டுக்கு அனுப்புகிறோம். தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும், 40 முதல், 80 வரை உள்ளது. இதை, 10க்கு குறைவாக கொண்டு வரவும், இறப்பை முற்றிலும் குறைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE