சேலம்: அகில இந்திய அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுப்பதில் சிறந்து விளங்கிய, சேலம், சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், தேசிய அளவில் இரண்டாமிடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
நடப்பு, 2020ம் ஆண்டுக்கான சிறந்த போலீஸ் ஸ்டேஷன் தேர்வு பட்டியலில், அகில இந்திய அளவில், சேலம், சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. இந்த ஸ்டேஷன், அகில இந்திய அளவில் தேர்வு பெற்றது எப்படி என்ற விபரங்கள், தற்போது வெளியாகி உள்ளது. சூரமங்கலம் ஸ்டேஷன் வளாகத்தைத சுத்தமாக வைத்திருந்தது, வளாகத்தில் பொதுக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் வழங்கிய புகார் மனுக்கள் மீது உடனடியான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டதோடு, குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை மேற் கொண்டது. மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, குற்றவாளிகள் அதிக அளவில் கைது செய்யப்பட்டது, பெண்களுக்கு எதிரான வன் கொடுமை, பாலியல் பலாத்காரம், சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்குகளில், குற்றவாளிகள் மீது பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இவற்றுக்கு எல்லாம் மேலாக, நடப்பாண்டில், 10 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, தண்டணை பெற்று கொடுத்தது என்ற வகையில், இந்த ஸ்டேஷனுக்கு அகில இந்திய அளவில், இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.
இது குறித்து ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வளர்மதி கூறியதாவது: போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வது, குற்றவாளிகள் மீது தயவு தாட்சன்யம் இன்றி நடவடிக்கை என, அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டதால், அகில இந்திய அளவில் இரண்டாமிடமும், தமிழக அளவில் முதலிடமும் கிடைத்துள்ளது. ஸ்டேஷனில் பணியாற்றி வரும் அனைத்து போலீசார், எஸ்.ஐ.,க்களின் ஒத்துழைப்பு மட்டுமின்றி உயரதிகாரிகளின் வழிகாட்டுதலும் சிறப்பிடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
முதல்வர் பாராட்டு: சேலம், சூரமங்கலம் அனைத்து மகளிர் ஸ்டேஷனுக்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட கோப்பையை, போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர்கள் செந்தில், சந்திரசேகரன், உதவி கமிஷனர் நாகராஜ், இன்ஸ்பெக்டர் வளர்மதி ஆகியோர், சேலத்தில் முதல்வர் பழனிசாமியிடம் வழங்கி ஆசி பெற்றனர். சிறப்பிடம் பெற்ற விபரங்களை போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், சேலம் மாநகர போலீஸ் அதிகாரிகளை பாராட்டியதோடு, மேலும் சிறப்பாக செயல்பட அறிவுரைகளை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE