சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டது. மேலும் வீராணம் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நகராமல் தாழ்வு மண்டலம்
வங்க கடலில் உருவான 'புரெவி' புயல் இலங்கையின் திருகோணமலை வழியே கரையை கடந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது. ராமநாதபுரம் பாம்பன் அருகே உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. சென்னையில் அதிகாலை முதல் கோடம்பாக்கம், வடபழனி, கிண்டி, அசோக் நகர், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பொழிந்தது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழைப்பொழிவு விவரம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக கொத்தாவாச்சேரியில் 33 செ.மீ மழையும், லால்பேட்டையில் 29 செ.மீ மழையும், பரங்கிப்பேட்டையில் 26 செ.மீ மழையும், காட்டுமன்னார் கோயிலில் 25 செ.மீ மழையும், குறிஞ்சிப்பாடியில் 25 செ.மீ மழையும், சேத்தியாத்தோப்பு பகுதியில் 20 செ.மீ மழையும், புவனகிரி பகுதியில் 19 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தொடர் மழை காரணமாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர் திறப்பு 2000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக வருவதால் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 19 அடியை எட்டியுள்ளது. இந்த ஏரியில் விரைவில் தண்ணீர் திறந்து விடப்படும் என கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE