சென்னை: வடகிழக்கு பருவமழை மிக தீவிரம் அடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையத்தின் தென்மண்டல ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் கூறியதாவது: மன்னார் வளைகுடா பகுதியில், நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நிலவுகிறது. இது மாலை வரை அங்கேயே தொடரும். பின் வலு குறைந்து மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக ராமநாதபுரம் வழியாக கேரளா நோக்கி நகரக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடத்தில் 36 செ.மீ., சிதம்பரம் 34 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 11 இடங்களில் அதிகனமழையும், 20 இடங்களில் மிக கனமழையும், 50க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மிகதீவிரமாக உள்ளது
அக.1 முல் இன்று வரை பெய்ய வேண்டிய இயல்பான அளவு: 370 மி.மீ.,
தற்போது வரை பெய்த அளவு 364 மி.மீ.,
இது, இயல்பு அளவை காட்டிலும் 2 சதவீதம் குறைவு ஆகும். நேற்று வரை 16 சதவீதம் குறைவாக இருந்த வடகிழக்கு பருவமழை, இன்று 2 சதவீதம் குறைவாக உள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும். கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரத்தில் அதிகனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், வேலூர் மற்றும் உள்மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழையும் பெய்யக்கூடும்.
காற்றை பொறுத்த மன்னார் வளைகுடா, தமிழக கடற்பகுதிகளில் , அடுத்த 24 மணி நேரத்திற்கு 40 முதல் 50 கி.மீ., வரை காற்று வீசக்கூடும். மீனவர்கள் நாளை காலை வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை தொடரும். ஒரு சில இடங்களில் கனமழையாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE