சென்னை: வருகின்ற சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ரஜினி கட்சிக்கு, அவர் முதல்வர் வேட்பாளர் இல்லை என்றும், அதில் அவர் உறுதியாக உள்ளதாகவும் கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்ததற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. நேற்று தனது அரசியல் வருகையை உறுதி செய்த ரஜினி, ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும், அதன் தேதி டிச.,31ல் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன் கூறியதாவது: ரஜினியால் மட்டுமே வெளிப்படையான, ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்க முடியும். வார்த்தை தவறாத மனிதர் ரஜினி. 2021 சட்டசபை தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிடுவேன் என்று 2017ல் சொன்னதை செய்துள்ளார். அவருக்கு வேறு எந்த அழுத்தங்களும் இல்லை. ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை. முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதில் ரஜினி உறுதியாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.