மும்பை: நாட்டை வழிநடத்தும் தலைவராவதில் ராகுலுக்கு பக்குவம் போதாது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளார். இந்நிலையில், அந்த மாநிலத்தில் வெளியாகும் நாளிதழ் ஒன்றுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் பேட்டி அளித்தார்.

இந்த பேட்டியை எடுத்த முன்னாள் எம்.பி., விஜய் தார்டா, நாட்டை வழிநடத்தும் தலைவராக ராகுலை தேசம் ஏற்றுக்கொள்ளுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு சரத்பவார், நாட்டை வழிநடத்தும் தலைவராக மாறுவதில், ராகுலுக்கு பக்குவம் போதவில்லை என நினைக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும், ராகுல் குறித்த ஒபாமாவின் கருத்து குறித்து கேட்ட போது, நாம் அனைவரின் கருத்தையும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய நாட்டின் தலைமையை பற்றி நான் என்ன வேண்டுமானாலும் கூற முடியும். ஆனால், மற்றொரு நாட்டின் தலைமையை பற்றி பேசமாட்டேன். ஒவ்வொருவரும் அவர்களுக்கான எல்லையை, அளவுகோலை கடைபிடிக்க வேண்டும். என்னை பொறுத்தவரை ஒபாமா எல்லைமீறி பேசிவிட்டார் எனக்கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் மற்றும் அக்கட்சிக்கு ராகுல் தடையாக மாறுகிறாரா என்ற கேள்விக்கு சரத்பவார் பதிலளிக்கையில், எந்தவொரு கட்சியின் தலைவரும் கட்சியின் அமைப்புக்குள் என்ன விதமான தன்மையை ஏற்று கொண்டிருக்கிறார்களோ அதைப்பொருத்தே எதிர்காலம் அமையும். எனக்கும், காங்., தலைவர் சோனியா, அவரின் குடும்பத்துக்கும் இடையே வேறுபாடு எழுந்தது. ஆனால், காங்., தொண்டர்கள், காந்தி- நேரு குடும்பத்தாரிடம் பற்றுடன் உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.