புதுடில்லி: கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், முதலில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கும், அதனை தொடர்ந்து , 2ம் கட்டமாக, முன்கள பணியாளர்கள் 2 கோடி பேருக்கும் போடப்பட உள்ளதாக, சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் தொடர்பாகவும், தடுப்பூசி குறித்தும் விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்த இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சுதிப் பந்தோபாத்யாய், தேசியவாத காங்கிரசின் சரத்பவார், தெலுங்கானா ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் நம நாகேஸ்வரா ராவ், சிவசேனாவின் விநாயக் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து சுகாதார அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்தது. சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் தாக்கல் செய்த அறிக்கையில், தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்ததும், முதல்கட்டமாக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதன் பின்னர், இரண்டாம் கட்டமாக போலீஸ், துணை ராணுவப்படையினர், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் என 2 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE