நடிகர் ரஜினி, ஜனவரியில் கட்சி துவக்குவதாக அறிவித்துள்ள நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உதவியுடன், கட்சியின் கொள்கைகளை வடிவமைக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
'தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம்' என்ற கோஷத்துடன், ரஜினி, அரசியலில் குதித்துள்ளார்.'விமர்சனங்களை தாங்க மாட்டார்; அதனால், அரசியலுக்கு வர மாட்டார்' என, அரசியல் கட்சிகள் நம்பியிருந்த நிலையில், ஜனவரியில் கட்சி துவங்கி, களமிறங்கப் போவதாக, அவர் அறிவித்திருப்பது, பெரிய கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் கனவில் மிதந்த தலைவர்கள், தங்கள் கனவு பலிக்காதோ என, பதற்றம் அடைந்துள்ளனர். ரஜினி கட்சி துவக்கியதும், அ.தி.மு.க., - தி.மு.க., என, அனைத்து கட்சிகளில் இருந்தும், முக்கிய பிரமுகர்கள் வெளியேறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், தமிழக அரசியல், இனி எந்த திசையை நோக்கி பயணிக்கும்; ரஜினியால் ஆட்சியை பிடிக்க முடியுமா; ரஜினியால் யாருக்கு பாதிப்பு என, அவரை சுற்றியே, அரசியல் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ரஜினியின் அறிவிப்பு, சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலானோர் வரவேற்று, கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதையெல்லாம், மற்ற கட்சியினர் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், தன் கட்சிக்கான கொள்கைகளை வடிவமைக்கும் பணியில், ரஜினி தரப்பு, தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஆலோசனையுடன், கட்சியின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. ரஜினி, எந்த மாதிரியான கொள்கையை முன்வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டு உள்ளது. கொள்கையை அறிவித்ததும், எதிர்மறையான விமர்சனங்களை எடுத்து வைக்க, மற்ற கட்சிகள் காத்திருக்கின்றன.எனவே, விமர்சிக்க முடியாத வகையில், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், கொள்கைகள் இருக்க வேண்டும் என, ரஜினி விரும்புகிறார்.
அதன் அடிப்படையில், இளைஞர்கள், இளம்பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவது; தமிழ் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது. மேலும், தொழில் வளர்ச்சி, கிராமங்கள் மேம்பாடு; அனைத்து துறைகளிலும், தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என, 10 அம்ச திட்டங்களை உள்ளடக்கி, கொள்கை வகுக்கப்படுகிறது.ஜனவரியில், கட்சியின் கொள்கைகள் வெளியிடப்படும். அது, மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
'ரஜினியிடம் இருந்து பிரிக்க சதி'
ரஜினி கட்சி துவக்கியதும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தமிழருவி மணியன் கருத்து தெரிவித்ததாக சமூக வலை தளங்களில் நேற்று தகவல் பரவியது. இது சர்ச்சைக்குள்ளானது.
இது தொடர்பாக தமிழருவி மணியன் நேற்று அளித்த பேட்டியில் ''ரஜினி முதல்வர் வேட்பாளரா; இல்லையா என்பது பற்றி நான் எந்த ஊடகத்திடமும் பேசவில்லை. ரஜினியிடம் இருந்து என்னை பிரிக்க சதி நடக்கிறது'' என்றார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE