என் இஷ்ட தெய்வமே முருகப் பெருமான் தான். திருச்செந்துார் சூரசம்ஹாரத்திற்கு நான் செல்லாத ஆண்டே கிடையாது. இந்த ஆண்டு, தடை இருந்த நிலையிலும், முதல் நாளிலேயே சென்று, சுவாமி தரிசனம் செய்து விட்டேன்.
- தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி
'அடேங்கப்பா... தி.மு.க.,வில் உங்களைப் போல பல பக்த கோடிகள் இருப்பர் போலிருக்கிறதே...' என, ஜாடையாக சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி.
எனக்கு பதவி கிடைத்தது போல பல ஆச்சர்யங்கள், எங்கள் கட்சியில் நடந்துள்ளன. மத்திய அரசு பதவியேற்பு விழாவில் பார்வையாளராக, என்னுடன் சேர்ந்து, பங்கேற்க தயாராக இருந்த நிர்மலா சீத்தாராமனை, மத்திய அமைச்சராக அறிவித்தது, எங்கள் கட்சி.
- பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்
'வீர சாகசங்கள், ஆச்சர்யங்கள், அதிசயங்கள் நிறைந்த கட்சி, பா.ஜ., என சொல்லுங்கள்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி.
மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையால், தமிழக எதிர்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளன என்று தான், பா.ஜ., தலைவர் கூறியுள்ளார். அவர் வந்ததால், எங்களுக்கு எந்த பயமும் இல்லை.
- அமைச்சர் ஜெயகுமார்

'அமித் ஷா வந்தது முதல், அ.தி.மு.க., அரசு அடக்கி வாசிக்கிறது என, பிற கட்சியினர் பேசிக் கொள்கின்றனரே...' என, போட்டுக்கொடுக்கத் தோன்றும் வகையில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி.
வரும் சட்டசபை தேர்தல், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கும்; 200 தொகுதிகள் வரை, அ.தி.மு.க., வெற்றி பெறும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போடும் அனைத்து, 'மாஸ்டர் பிளான்'களையும் தவிடுபொடியாக்குவோம்.
- அமைச்சர் வேலுமணி
'அப்போ, கூட்டணி கட்சிகளுக்கு, 34 இடங்கள் தானா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பேட்டி.
தமிழக மக்கள் தொகையில், 81 சதவீதம், ஓ.பி.சி., வாக்காளர் உள்ளனர். ஓ.பி.சி.,யின் அனைத்து ஜாதியினரும் ஓரணியில் திரண்டால், வரும் சட்டசபை தேர்தலில், பா.ம.க., வெற்றி பெறுவது கடினம். அதுபோல, எந்த கூட்டணியில், பா.ம.க., இடம் பெற்றாலும், அந்த கூட்டணி வெற்றி பெறுவது கடினம்.
- அகில இந்திய ஓ.பி.சி., நலச்சங்க நிறுவனர் ராஜ்மோகன்
'இப்படியும் நடந்தால் எப்படி இருக்கும்...' என, ஏக்கம் தெரிவிக்கும் வகையில், அகில இந்திய ஓ.பி.சி., நலச்சங்க நிறுவனர் ராஜ்மோகன் பேட்டி.
மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது போல, பொறியியல், சட்டம், வேளாண்மை படிப்புகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கினால், ஏழை மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
- கட்டுமான பொறியாளர் அமைப்பின் தலைவர் பாலமுருகன்
'அப்படியே, அரசு பள்ளியில் படித்தால், அரசு வேலை உறுதி என்ற உத்திரவாதத்தையும், அரசிடம் கேளுங்களேன்...' என, எரிச்சலை காட்டும் வகையில், கட்டுமான பொறியாளர் அமைப்பின் தலைவர் பாலமுருகன் அறிக்கை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE