வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், முதன் முறையாக, 20 முள்ளங்கிகள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.
விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், பல்வேறு ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அவற்றில், காற்று இல்லாத சூழலில் தாவரங்களை வளர்ப்பது குறித்தும், ஆய்வு நடக்கிறது. அமெரிக்காவின், 'நாசா' விண்வெளி ஆய்வு மையத்தின் உதவியுடன் நடக்கும் இந்த ஆய்வு திட்டத்தின் கீழ், ஏற்கனவே கடுகு, முட்டைக் கோஸ், சிவப்பு லெட்யூஸ் ஆகியவை விளைவிக்கப்பட்டன. இதையடுத்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், முள்ளங்கி வளர்ப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், முதன் முறையாக, 20 முள்ளங்கிகள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.

அவற்றை, நாசா விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ், பக்குவமாக குளிர்சாதனப் பெட்டியில், பாதுகாப்பாக வைத்தார். அடுத்த ஆண்டு, 'ஸ்பேஸ்எக்ஸ்' விண்கலம் மூலம், இந்த முள்ளங்கிகள் பூமிக்கு எடுத்து வரப்பட்டு, ஆய்வு செய்யப்படும்.இது குறித்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் ஆராய்ச்சிக் குழு, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள செய்தி:

சுவையான முள்ளங்கி, ஊட்டச்சத்து நிறைந்தது. விரைவாக வளரக் கூடியது. அதனால், அதை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். நாங்களே எதிர்பார்க்காத வகையில், பூமியை விட விண்வெளி ஆய்வு மையத்தில் பல மடங்கு விரைவாக வளர்ந்துள்ளது.புவியீர்ப்பு விசை இல்லாத பகுதியில், தாவரங்களின் அதிவேக வளர்ச்சி குறித்த ஆய்வுக்கு, இது உதவும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE