சென்னை : டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக., இன்று(டிச., 5) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதை வைத்து, விவசாயிகளுக்கு ஆதரவான கட்சி திமுக., என்கிற ரீதியில் சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்கின்றனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனிடையே வருகிற 8ம் தேதி, விவசாயிகள் பாரத் பந்த் என்ற முழக்கத்தை முன் எடுத்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக., சார்பில் தமிழகம் முழுக்க இன்று கறுப்புக் கொடி போராட்டம் நடந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர்.

சேலத்தில் நடந்த போராட்டத்தில் திமுக., தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் : ''இந்த போராட்டம் அரசியல் நோக்கத்திற்காக, கட்சி வளர்ச்சிக்கு, சொந்த நோக்கத்திற்காக அல்ல. நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளுக்காக நடக்கும் போராட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். போராட்டத்தின் மூலம் பா.ஜ., அரசை, விவசாயிகள் அசைத்து கொண்டுள்ளனர்'' என்றார்.
திமுக.,வின் இன்றைய போராட்டத்தை முன் வைத்து சமூகவலைதளங்களில் குறிப்பாக டுவிட்டரில் #DMKwithFarmers என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது. ''திமுக., தான் எப்போதும் விவசாயிகளுக்கான ஆதரவு கட்சி. விவசாயிகளுக்கு ஒரு பிரச்னை என்றால் திமுக., தான் முதலில் குரல் கொடுக்கும்'' என்கிற ரீதியில் சிலர் கருத்து பதிவிட்டு, ஸ்டாலின் விவசாயிகளுடன் இணக்கமாக உள்ள போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சிலர், ''தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக முதன்முதலில் உழவர் சந்தை என்ற ஒன்றை ஏற்படுத்தியது திமுக., தான்'' என கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.

இன்னும் சிலர், ''விவசாயி என்று தன்னை கூறிக் கொள்ளும் முதல்வர் பழனிசாமி, விவசாயிகளை வஞ்சித்து, மத்திய அரசுக்கு எடுபடியாக உள்ளார்'' என கருத்து பதிவிட்டுள்ளனர். ''விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் பா.ஜ.,வும், அதிமுக.,வும் அவர்களின் முதுகெலும்பை உடைக்கிறார்கள்'', ''கடந்த 10 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. அதனால் தான் திமுக., களமிறங்கி உள்ளது'' போன்ற கருத்துக்கள் டுவிட்டரில் பரவலாக காண முடிகிறது. இதனால் டுவிட்டரில் #DMKwithFarmers, #DMK, #TakeBackFarmLaws போன்ற ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.
அதேசமயம், ''அரசியல் உள்நோக்கத்திற்காக விவசாயிகள் போராட்டத்தை திமுக., கையில் எடுத்துள்ளது. தஞ்சாவூரை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தில் கை யெழுத்திட்டவர் ஸ்டாலின். தற்போது விவசாயிகளுக்கு ஆதரவு போன்று நடிக்கிறார்'' போன்ற எதிர் கருத்துக்களையும் டுவிட்டரில் காண முடிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE