சென்னை: புயல் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள சென்னை குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாளை(டிச.,06) முதல் டிச.,13 வரை இலவச உணவு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் சுமார் 5.3 லட்சம் குடும்பங்கள் குடிசை பகுதியில் வசிக்கின்றனர். மொத்தம் 23 லட்சம் பேர் வசிக்கின்றனர். சமுதாய நலக்கூடங்கள் அம்மா உணவகங்கள் மூலம், நாளை காலை உணவு துவங்கி டிச., 13ம் தேதி இரவு வரை குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாள்தோறும் 3 நேரம் உணவு வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
7 பேரின் குடும்பத்திற்கு நிதி
முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: புரெவி புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை கேட்டு வருத்தமடைந்தேன். அவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், அவர்களுக்கு ரூ.4 லட்சம், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், ரூ.6 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்தும், மொத்தம் ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

கனமழை காரணமாக 37 பசுமாடுகள், 4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள் மற்றும் 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம், எருமை மாடு ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம், கன்று ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும். சேதமடைந்துள்ள குடிசை, ஓட்டு வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE