தேர்தல் வியூகங்கள், கூட்டணி கட்சிகளுடனான பேச்சு, உட்கட்சி பூசல்கள் உட்பட, பல்வேறு விவகாரங்களையும் சாமர்த்தியமாக சமாளித்து வந்த, காங்கிரஸ் மூத்த தலைவரான அகமது படேலின் மறைவு, அக்கட்சியில் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.கட்சியின் முக்கிய முகமாக விளங்கிய அவரது இடத்தை நிரப்பப் போகும் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி, கட்சி தலைமை மத்தியில் மட்டுமல்லாது, தொண்டர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் இருந்து, காங்., கட்சியின் கவுன்சிலராக, 1976ல் தேர்வானவர் அகமது படேல், 71. அடுத்த ஆண்டே, லோக்சபா தேர்தலில் போட்டியிட, முன்னாள் பிரதமர் இந்திராவால் தேர்வு செய்யப்பட்டார்.அதன் பின் மூன்று முறை, லோக்சபா எம்.பி.,யாகவும், ஐந்து முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பதவி வகித்தார்.
நெருங்கிய நண்பர்
காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்திராவுக்கு நெருக்கமானவராக இருந்த அகமது படேல், அவரது மறைவுக்கு பின், ராஜிவின் நெருங்கிய நண்பராகவும், விசுவாசத்துக்கு உரியவராகவும் விளங்கினார்.அவரது மறைவுக்கு பின், சோனியாவின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டார்.
பல்வேறு கட்சிகளுடனான கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு உட்பட, உட்கட்சி விவகாரங்களிலும், அகமது படேலின் ஆலோசனையை பெற்றே, சோனியா செயல்பட்டு வந்தார்.காங்., கட்சியின் மரியாதைக்குரிய மூத்த தலைவராக இருந்த அகமது படேல், உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த மாதம், 25ல் காலமானார்.இவரது மறைவு, காங்., கட்சியில் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது இடத்தை நிரப்பப் போகும் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரசில், 10க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் தற்போது இருந்தாலும், அரசியலை உள்வாங்கி, எதிர்க்கட்சித் தலைவர்களும் மதிக்கக்கூடிய தலைவராகவும், ராகுலின் நம்பிக்கைக்கு உரியவராகவும் ஒரு தலைவர் கிடைப்பது அவ்வளவு சுலபம் அல்ல என்றே தெரிகிறது.
நன்மதிப்பு
காங்., கட்சியை பொறுத்தவரை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ம.பி., முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், காங்., செயற்குழு உறுப்பினர் குலாம்நபி ஆசாத் ஆகியோருக்கு, கட்சிகளை கடந்த மரியாதையும், ராகுலிடம் நன்மதிப்பும் உள்ளது.இதில், ஒவ்வொருவருக்கும் தனித்துவமான திறமையும், கட்சியை சரியான திசையில் வழிநடத்தும் திறனும் இருப்பதாக, கட்சி மேலிடம் கருதுகிறது.
ஆனாலும், இந்த பட்டியலில் இருந்து முற்றிலுமாக விலகி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை, படேலின் இடத்துக்கு கொண்டு வருவது குறித்தும், கட்சி மேலிடம் சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்து வந்த அசோக் கெலாட்டை, நம்பகமான தலைவராக தலைமை கருதுகிறது. தற்போதைய அரசியல் நிலவரங்களை நன்கு புரிந்தவராகவும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மரியாதைக்குரிய தலைவராகவும் அவர் பார்க்கப்படுகிறார்.சச்சின் பைலட்டால், ராஜஸ்தான் அரசு கவிழும் நிலை ஏற்பட்ட போது, சமயோசிதமாக செயல்பட்டு, நெருக்கடியை சமாளித்த அவரது சாதுர்யம் வெகுவாக பாராட்டப்பட்டது.இவை அனைத்துக்கும் மேல், சோனியா குடும்பத்தினருக்கு விசுவாசமான வராக கெலாட் கருதப்படுகிறார்.
அனுபவம் கிடையாது
எனவே, அகமது படேல் இடத்துக்கு இவரை நியமிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆனால், அவர் தேர்தல் அரசியலில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளார். படேலை போல, தேசிய அரசியலில் அவ்வளவாக அவருக்கு அனுபவம் கிடையாது. மேலும், முதல்வர் பதவியில் இருக்கும் அவர், அதை சச்சின் பைலட்டிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது.
இவருக்கு அடுத்தபடியாக, படேலின் இடத்துக்கு, திக்விஜய் சிங் மற்றும் கமல்நாத் ஆகியோரும் வர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. திக்விஜய் சிங்கை பொறுத்தவரை, அரசியல் வியூகங்களை வகுப்பதில் சிறந்தவராகவும், மக்களை கவரக் கூடிய வகையில் அரசியல் செய்யத் தெரிந்தவராகவும் பார்க்கப்படுகிறார். ஆனால், அவருடைய துடுக்கான பேச்சு, பல சந்தர்ப்பங்களில் அவரை சிக்கலில் சிக்க வைத்துஉள்ளது. இது, மிகப் பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது.
மத்திய மற்றும் மாநில அரசியலில் நல்ல அனுபவம் வாய்ந்த கமல்நாத், ம.பி.,யில் தன் முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் ஆட்சியை இழந்ததால், அவருக்கான வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.
இவர்களுக்கு அடுத்தபடியாக, காங்கிரசில் நம்பிக்கைக்குரிய நபராக, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கருதப்படுகிறார். ஆனால், அவருக்கு இப்போதே, 78 வயதாகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர் பரபரப்பு அரசியல் செய்ய முடியும் என்பதையும் தலைமை யோசிக்காமல் இல்லை.
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை பொறுத்தவரை, தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் அனுபவம் வாய்ந்தவராக கருதப்பட்டாலும், வட மாநில அரசியலில், அவர் ஏற்றுக் கொள்ளப்படுவாரா என்ற சந்தேகம் தலைமைக்கு உள்ளது.
வாய்ப்பு இல்லை
சிதம்பரத்துக்கு, சரளமாக ஹிந்தி பேச வராததும் குறையாக பார்க்கப்படுகிறது. இவர்களை தவிர, ஜெய்ராம் ரமேஷ், மல்லிகார்ஜுன கார்கே, கபில் சிபல், சல்மான் குர்ஷித் ஆகியோருக்கும், அகமது படேல் இடத்தை நிரப்பும் தகுதி உள்ளது. ஆனாலும், படேல் அளவுக்கு அவர்களிடம் அரசியல் புத்திசாலித்தனமும், இணக்கமாக போகக்கூடிய திறனும் இல்லை என, கட்சியினர் கருதுகின்றனர்.
இளம் தலைவர்களை பொறுத்தவரை, ரன்தீப் சுர்ஜேவாலாவுடன், ராகுல் நெருக்கமாக உள்ளார். ஆனால், அரசியல் அனுபவம் மட்டுமே, படேலின் இடத்தை நிரப்பக்கூடிய முக்கிய தகுதியாக பார்க்கப்படுவதால், இளம் தலைமுறையினருக்கு அந்த இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE