புதுடில்லி:கொரோனா பரிசோதனைக்கு, பொதுமக்களிடம் இருந்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் வசூலித்த கூடுதல் கட்டணத்தை திரும்ப வழங்க உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஒடிசாவில், கொரோனா கண்டறியும், பி.சி.ஆர்., பரிசோதனை கட்டணம், 400 ரூபாய் என, அம் மாநில அரசு அறிவித்துள்ளது.'நோட்டீஸ்'இதுபோல், நாடு முழுதும் தனியார் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான பி.சி.ஆர்., பரிசோதனை கட்டணம், 400 ரூபாய் என, நிர்ணயிக்க உத்தரவிடக்கோரி, பா.ஜ., பிரமுகரும் வழக்கறிஞருமான அஜய் அகர்வால், உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்துஉள்ளார்.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் பதில் அளிக்க, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை அஜய் அகர்வால் நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு உள்ள தாவது:தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பாதிப்பை கண்டறியும், பி.சி.ஆர்., பரிசோதனைக்கு, 4,500 ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.
இந்தப் பரிசோதனை உபகரணங்கள் உட்பட அனைத்து செலவுகளும்,800 முதல்,ரூ.1,200மட்டுமே. இப்போதும் சில மாநிலங்களில், பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உண்மையில் இந்த பரிசோதனைகளில் ஆய்வகங்களுக்கான செலவு, 200 ரூபாய் மட்டுமே. பொதுநல மனுஅனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, ஒடிசா மாநில அரசு, பி.சி.ஆர்., பரிசோதனை கட்டணமாக, 400 ரூபாய் நிர்ணயித்து உள்ளது.
இதன் வாயிலாக, அப்பாவி மற்றும் ஏழை மக்களிடம் இருந்து ஆய்வகங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அதிக பணத்தை வசூலித்துள்ளனர் என, உறுதியாகிறது.எனவே, பி.சி.ஆர்., பரிசோதனைக்கு கூடுதலாக பெற்ற பணத்தை, திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், 'இதன் மீதான விசாரணை, சச்சின் ஜெயின் என்பவர் தாக்கல் செய்துள்ள கொரோனா சிகிச்சை கட்டணம் தொடர்பான பொதுநல மனுவுடன் சேர்த்து நடத்தப்படும்' என, கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE