ஜாதிக்கு தேவை தடுப்பு மருந்து!| Dinamalar

ஜாதிக்கு தேவை தடுப்பு மருந்து!

Updated : டிச 07, 2020 | Added : டிச 05, 2020 | கருத்துகள் (38) | |
தேர்தல் நெருங்க ஆரம்பிக்கும் போது, இதுவரை, 'கோமா'வில் இருந்தவர்கள் எல்லாம், தங்களது இருப்பை மக்களுக்கு உணர்த்த தேர்ந்தெடுக்கும் ஆயுதம், போராட்டம். தினமும் ஏதாவது ஒரு கட்சி, ஏதாவது ஒரு காரணத்திற்காக போராட்டத்தை நடத்தி, மக்களின் கவனத்தை திசை திருப்பிய வண்ணம் உள்ளது. அந்த வகையில், சமீபத்தில், தமிழகத்தில் நடக்கும் போராட்டம், இட ஒதுக்கீடு போராட்டம்.'ஜாதிகள் இல்லையடி
 ஜாதி, தடுப்பு மருந்து, உரத்த சிந்தனை

தேர்தல் நெருங்க ஆரம்பிக்கும் போது, இதுவரை, 'கோமா'வில் இருந்தவர்கள் எல்லாம், தங்களது இருப்பை மக்களுக்கு உணர்த்த தேர்ந்தெடுக்கும் ஆயுதம், போராட்டம். தினமும் ஏதாவது ஒரு கட்சி, ஏதாவது ஒரு காரணத்திற்காக போராட்டத்தை நடத்தி, மக்களின் கவனத்தை திசை திருப்பிய வண்ணம் உள்ளது. அந்த வகையில், சமீபத்தில், தமிழகத்தில் நடக்கும் போராட்டம், இட ஒதுக்கீடு போராட்டம்.

'ஜாதிகள் இல்லையடி பாப்பா. குலத்தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம்' என்று பாடிய, முண்டாசுக்கவிஞன் பாரதியார், இன்று உயிரோடு இருந்திருந்தால், மிகவும் வேதனை அடைந்திருப்பார்.சங்கம் வைத்து, தமிழ் வளர்த்த தமிழர்கள், சங்கம் வைத்து, ஜாதியை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.சமூக நீதி


எத்தனையோ மகான்கள் அவதரித்து, மனிதர்களை பாகுபாடின்றி அரவணைத்த தமிழ் மண்ணில் இன்று, ஜாதிகள் பெயரில் நடக்கும் நிகழ்வுகள், மனதை வேதனைப் படுத்துகின்றன. மக்களாட்சியில் ஜாதி என்பது, ஒவ்வொரு கட்சிக்கும் ரத்தமும் சதையுமாக ஒட்டிக்கொண்டும், ஓடிக்கொண்டும் இருக்கிறது. உள்ளூர் பஞ்சாயத்து முதல், சட்டசபை, பார்லிமென்ட் வரை ஜாதி இல்லாமல், இங்கே எதுவும் நடப்பதில்லை.

அரசியலிலிருந்து அரசு வேலை வரை, ஜாதி மட்டுமே பார்க்கப்படுகிறது. வேதனை என்னவெனில், படிக்காத மக்களிடம் மட்டுமல்லாமல், மருத்துவம் போன்ற மேற்படிப்பு படித்த மனிதர்களின் மனம் வரையும் ஜாதி இருக்கிறது. ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டுக் கிடந்த மனிதர்களில், கீழே இருந்தவர்களை மேலேற்ற, இந்த நாட்டில் அவர்களுக்கான இட ஒதுக்கீடும், சமூக நீதியும் தேவைப்பட்டது.

எனினும், சுதந்திரம் அடைந்து, இத்தனை ஆண்டுகள் கழித்தும், இட ஒதுக்கீடு தேவை என்று போராடுவது, நம் சுதந்திரத்தை, நாம் சரியாக பேணவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தான், ஜாதி எனும் சேற்றைப் பூசிக் கொண்டிருக்கப் போகிறோம்? வல்லரசு கனவில் இருக்கும் நம் தேசத்துக்கு, பின்னடைவை ஏற்படுத்துவது ஜாதியே.

நமது தமிழகத்தில் மட்டும், அரசிதழ்படி, 76 ஆதி திராவிடர், 36 பழங்குடியினர், 136 பிற்படுத்தப்பட்டோர், 40 மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஏழு இஸ்லாமியர்,68 சீர்மரபினர் ஜாதிகள் உள்ளன. இங்குள்ள ஒவ்வொரு ஜாதியினரும், தங்களுக்காக ஜாதிவாரியாக போராட ஆரம்பித்தால், நம் மாநிலம் என்னவாகும் என, நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

பல நுாறு ஆண்டுகள் நீடித்த, ராமர் கோவில் பிரச்னை முடிந்து, அயோத்தியில் ஆலயமே எழும்ப ஆரம்பித்துவிட்டது. எனவே, ஜாதிகள் பிரச்னைக்கும், ஒரு தீர்க்கமான முடிவுக்கு அரசு வர வேண்டிய காலமிது.

கொரோனாவை விட மோசமான கிருமியான ஜாதிக்கு, முதலில், 'வாக்சின்' எனும் தடுப்பு மருந்து செலுத்த வேண்டிய நேரமிது. ஜாதிய போராட்டங்களில் எந்த ஜாதி தலைவரும், போலீசிடம் பிரம்படி படுவதில்லை. அது போல, எந்த கட்சியின் அடிமட்ட தொண்டனும் தலைவராகி விட முடிவதில்லை. ரயில் தண்டவாளங்களில் பொருட்களை கொட்டி எரிப்பது, ரயில்களை தடுப்பது; சாலையில் மரங்களை வெட்டி வீழ்த்துவது, எரிப்பது தான், இப்போதைய ஜாதிய போராட்டங்களின் செயல்களாக உள்ளன.


பிரதிநிதித்துவம்


தன் ஜாதிக்கென மட்டுமே போராடும் இவர்கள், எப்படி மாநிலத்தை ஆளும் தலைவர்களாக மாறுவர்... அதனால் தான், இவர்களை மக்கள் இதுவரை, அந்த உயரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கவில்லையோ! மாநிலத்தின் ஒட்டுமொத்த வேலையில் குறிப்பிட்ட சதவீதம், தங்களுக்கு மட்டுமே வேண்டுமென்றால், மற்ற ஜாதியினர் எங்கு போவர். தமிழகத்தில் எத்தனையோ ஜாதிகள், எவ்வித பிரதிநிதித்துவமும், எவ்வித ஆதரவும் இல்லாமல், மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. அந்த ஜாதிகளை சேர்ந்தவர்கள், இந்த நாட்டில் பிறந்தது வீணா?

இந்திய வேலைவாய்ப்பில் கிட்டத்தட்ட, 80 சதவீதத்திற்கும் மேல், தனியார் வசமாகிவிட்டது. மீதமிருக்கும், 20 சதவீதத்திற்கும் குறைவான அரசு வேலைக்கு, இப்படி போராடினால், நாட்டின் நிர்வாகம் என்னாவது?ஜாதியின் அடிப்படையில் வேலையை அடைபவர், அந்த ஜாதிக்கு அனுசரணையாக நடக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம், யாரால் தர முடியும்?

நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த முஸ்லிம் மன்னன் ஒருவன், இரவு நேரம் எதிரிப் படையை நோட்டம் விட, தன் வீரர்களுடன் சுற்றி வந்தான். இந்தியப் படைகள் தங்கியிருக்கும் பகுதியில், வெவ்வேறு இடங்களில் அடுப்புகள் இருந்தன.'ஏன் இத்தனை அடுப்புகள்?' என, அந்த மன்னன் கேட்க, 'இங்கே நிறைய ஜாதிகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சமையல் செய்யவே, தனித்தனி அடுப்புகள் உள்ளன' என, அருகில் இருந்தவர்கள் சொல்லினர்.உடனே அந்த மன்னன், 'ஆஹா, இனி நாம் ஜெயிக்க, கஷ்டப்பட வேண்டாம்; எளிதாக ஜெயித்து விடலாம்' என்கிறான்.

அதாவது, ஜாதி என்ற பிரிவுகள் இருப்பதால், ஒற்றுமை இருக்காது; ஒற்றுமை இல்லாத மனிதர்களை வெற்றிக்கொள்வது எளிது என நினைக்கிறான். அவன் நினைத்த மாதிரியே, வெற்றியும் பெறுகிறான்.இப்படித் தான், முஸ்லிம் மன்னர்கள், அதன் பின், ஆங்கிலேயர்களிடம் நாம் அடிமைப்பட்டு கிடந்தோம்.


வல்லரசு


இன்றும், நம்மை விழுங்க, சுற்றிலும் எதிரி நாடுகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில், ஜாதிகளை சொல்லி, மக்களை பிரித்து வைத்திருப்பது, எதிர்கால சந்ததிக்கு நல்லது இல்லை. இன்னும் வாய்ப்பு கிட்டாத ஜாதிகளை சேர்ந்த பலருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டும், இட ஒதுக்கீடு கேட்கக் கூடாது.முன்னேறிய எந்த வல்லரசிலும், ஜாதிகள் கிடையாது. ஜாதிகளே இல்லாத இந்தியாவாக மாறாமல், வல்லரசு ஆக முடியாது.

எனினும், மனித மனங்களில் ஊறிப்போன ஜாதியை ஒட்ட வெட்டி எறிவது, அத்தனை எளிதல்ல. அரசு நினைத்தால், சட்டத்தின் மூலம், ஜாதியை ஒரே நாளில் ஒழிக்கலாம்.ஜாதியை புறக்கணிப்பவர்களுக்கு, அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கலாம். ஜாதிகளை துாக்கிப் பிடிக்கும், அரசியல் தலைவர்களை அழைத்து பேசி, ஜாதியவாதத்திற்கு தடை விதிக்கலாம். எப்படி, தேர்தலின் போது, ஜாதி, மதத்தின் பெயரால் பிரசாரம், ஓட்டு சேகரிப்பு தடை செய்யப்பட்டுள்ளதோ, அதுபோல, ஜாதியின் பெயரால் அரசியல் செய்வதை தடை செய்ய வேண்டும்.

ஜாதிகளின் பெயரில் இருக்கும் நல அமைப்புகள், ஜாதிய சங்கங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.இந்த மாநிலத்தில் பிறந்த அனைவரும், தமிழர்களே. அனைவருக்கும், அனைத்திலும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்; அதற்கான சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு, வளர்ந்தநாடுகளில் இருக்கும், சட்ட, திட்டங்களை பின்பற்றலாம்.

தமிழகம் முழுதும் சுற்றி வந்தால், அந்தந்த பகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கும் அல்லது ஒன்றாக குறிப்பிட்ட இடங்களில் வாழும் ஜாதிகளின் அடையாளங்களை காண முடிகிறது. தேசத் தலைவர்கள் முதற்கொண்டு, சினிமா நடிகர்கள் வரை, ஜாதியின் பெயரில், பிரித்து வைத்துள்ளனர்.

நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களில் ஜாதி வெறி அதிகமாக உள்ளது.எளிதில் பற்றிக் கொள்ளும் கற்பூரம் போன்ற இளைஞர்களை, ஜாதிய தலைவர்கள், தங்கள் நயவஞ்சக பேச்சால், மூளை சலவை செய்து வருகின்றனர்.எல்லா ஜாதிய தலைவர்களும், கையில் வாளுடனும், முறுக்கிய மீசையுடனும், சுவர்களில் வரையப்பட்டுள்ளனர். நேர்மையான அரசியலால், அரசியல் களத்தில் சிலர் முன்னேறி வர, சில தலைவர்கள், சுவர் விளம்பரங்களால், 'பெரிய தலைவர்களாக' வலம் வருகின்றனர்.


நகரங்களிலும், கிராமங்களிலும், காசு கொடுத்து விளம்பரம் தேடிக் கொள்ளும் அந்த தலைவர்களை கட்டுப்படுத்த, சுவர் விளம்பரங்களுக்கு அரசு தடை விதிக்கலாம்.'எந்த ஜாதி தலைவரும், சுவர் விளம்பரம் செய்யக் கூடாது; கட்-அவுட் வைக்கக் கூடாது; பிற ஜாதியினரை கேவலமாக பேசக் கூடாது' என, சட்டம் பிறப்பித்து, கடினமாக அமல்படுத்த வேண்டும்.


கடுமையான சட்டம்


இதை முதலில் செய்தாலே, அதாவது, சுவர் விளம்பரங்களை தடுத்து நிறுத்தினாலே, ஜாதியம், தமிழகத்தில் மறைந்து விடும்.அதுபோல, குறிப்பிட்ட ஜாதியினர் அதிகம் வாழும் பகுதிகளில், பிற ஜாதியினருக்கு எதிரான செயல்பாடுகள், பேச்சுகள், வாசகங்கள், விளம்பரங்கள் உள்ளன. அவற்றை, அப்போதைக்கு அப்போதே அரசு நீக்க வேண்டும். உழைத்தால் மட்டுமே உயர்வு கிடைக்கும் என்பதை, அரசியல் கட்சித் தலைவர்களும், ஜாதிய தலைவர்களும், கட்சியினருக்கும், நாட்டு மக்களுக்கும் உணர்த்த வேண்டும்.

எனினும், இவற்றை அமல்படுத்துவது சிரமம் தான். படிப்படியாக மக்களுக்கு நல்லறிவு புகட்டுவதன் மூலமும், கடுமையான சட்டங்கள் மூலமும் இந்நிலை ஏற்படுத்தலாம். ஜாதிகள் அற்ற, மத துவேஷம் இல்லாத, திறமைக்கு மட்டுமே மதிப்பு உள்ள சமுதாயமே வளர்ந்த சமுதாயம். அத்தகைய சமுதாயத்தை, தமிழகத்தில் ஏற்படுத்த, நாம் அனைவரும் உறுதி பூணுவோம்!

-வாகைச்செல்வி,
சமூக ஆர்வலர் ,
தொடர்புக்கு: மெயில்: vagaiselvi@gmail.comபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X