தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்: யார் அரசியலுக்கு வந்தாலும், எங்களுக்கு பாதிப்பு இல்லை. ரஜினி வருகையால், தி.மு.க.,விற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், அந்தக் கட்சியில் ஏராளமான குழப்பம் உள்ளது. தி.மு.க., ஆட்சியிலிருந்த போது, எதையும் செய்யவில்லை. இவர்கள் வந்தால், தமிழகம் நாசமாகிவிடும் என்பதை, மக்கள் உணர்ந்துள்ளனர்.
'டவுட்' தனபாலு: ரஜினியை சாடாமல், தி.மு.க.,வையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் வசைபாடுவதன் மூலம், தேர்தல் நேரத்திலோ அல்லது தேர்தல் முடிவுக்குப் பிறகோ, ரஜினி கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வீர்களோ; அதனால் தான், 'எங்களுக்கு பாதிப்பு இல்லை' என்கிறீர்களோ என்ற, 'டவுட்' நடுநிலையாளர்களுக்கு வருகிறது!
தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்: நீர் மேலாண்மை திட்டங்களை, தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதற்காக, விருதுகளை பெற்றுள்ளோம். இயற்கைப் புயலோ அல்லது செயற்கைப் புயலோ எதுவாக இருந்தாலும், முதல்வர் இ.பி.எஸ்., வியூகத்தில் தவிடுபொடியாகும்.
'டவுட்' தனபாலு: தமிழக அரசின் நீர் மேலாண்மையைத் தான், தமிழகத்தின் தலைநகர் மற்றும் டெல்டா பகுதி நகரங்களில் தேங்கி நிற்கும் மழை நீர் அருமையாக காட்டுகிறதே... முதல்வர் இ.பி.எஸ்., வகுத்த வியூகத்தால் தான், இந்த பிரச்னையோ என்ற, 'டவுட்' வருதே!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் துறையாக மாற்ற, மத்திய அரசு முயற்சிக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, தமிழை அவமதிப்பதுடன், தமிழகத்திற்குச் செய்யும் துரோகமாகும். எனவே, இனிமேலாவது, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை, மத்திய பல்கலையாக மாற்ற வேண்டும்.
'டவுட்' தனபாலு: 'ஹிந்தி வேண்டாம்; 'நீட்' வேண்டாம்; ஒரு பைசா கூட செலவில்லாத, 'நவோதயா வித்யாலயா' வேண்டாம்; அண்டை மாநிலங்களுடன் இணக்கம் வேண்டாம்' என கோஷமிடும் உங்களைப் போன்ற சில கட்சிகளின் தலைவர்கள் தான், தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றனர் என்றல்லவா பேச்சு உலாவுகிறது. அதை மறைக்கவே, இப்படி தமிழ் வேடம் போடுகிறீர்களோ என்ற, 'டவுட்' வருது!
தமிழக பா.ஜ., நிர்வாகி குஷ்பு: தெலுங்கானா மக்கள் எதை எதிர்பார்க்கின்றனர் என்பதை ஐதராபாத் தேர்தல் முடிவு காட்டியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., மீதான நம்பிக்கையை இந்த முடிவு பிரதிபலிக்கிறது. வரும், 2021 சட்டசபை தேர்தலின் மூலம், தமிழகத்திலும் காலடி எடுத்து வைப்போம்.
'டவுட்' தனபாலு: சட்டசபைக்குள் காலடி தான் எடுத்து வைக்கப் போகிறீர்களா; அதற்குத் தான், இத்தனை பேரணி, யாத்திரை, களேபரங்களா... அப்போ, 'நாங்க கை காட்டும் கட்சி தான், தமிழகத்தில் ஆட்சியமைக்கும்' என, பா.ஜ., தலைவர்கள் கூறியது, சும்மா, வெத்து வேட்டுகளா என்ற, 'டவுட்டை' கிளியர் பண்ணுங்க!
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: செம்மொழி சிறப்பைப் பெற்ற தமிழ் மொழிக்கு, உயர் சிறப்பு மத்திய நிறுவனம் ஒன்றை, அப்போதைய முதல்வர், கருணாநிதி முயற்சியால் மத்திய அரசு உருவாக்கியது. தற்போது, இந்திய மொழிகள் மத்திய நிறுவனம், 'பிபிவி' என்று பெயர் மாற்றப்பட்டு, அதனுடன் சென்னையில் இயங்கி வரும் செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தை இணைக்கப்பட உள்ளது. இதை தமிழக முதல்வர், தடுத்து நிறுத்த வேண்டும்.
'டவுட்' தனபாலு: இப்படி, 'லட்டு' போல எல்லா விவகாரங்களையும் எடுத்து, தமிழக முதல்வருக்கு கொடுத்து, அந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணச் செய்து விடுகிறீர்கள். முதல்வர் இ.பி.எஸ்.,சும் எந்த, 'டென்ஷனும்' இல்லாமல், மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்ல முடிகிறது. இதன் மூலம் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும், உதவுகிறீர்களோ என்ற, 'டவுட்' மக்களுக்கும் வந்துவிட்டது!
தமிழக பா.ஜ., தலைவர் முருகன்: விவசாயிகளை திசை திருப்ப, எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. வட மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களை வைத்து, தமிழகத்திலும் விவசாயிகளை திசை திருப்ப, தி.மு.க., கூட்டணி கட்சிகள் முயற்சிக்கின்றன. இதை, தமிழக விவசாயிகள் உணர்ந்துள்ளனர்.
'டவுட்' தனபாலு: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை, கடந்த சில மாதங்களாக நடத்தியுள்ளன. இப்போது, விவசாயிகளைக் காப்பாற்றுவோம் என நாடகம் ஆடுகின்றன. இதைப் பார்க்கும் போது, எதிர்க்கட்சிகளின் பம்மாத்து வேலைகள், மக்களிடம் எடுபடவில்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE