கட்சி தாவ வேண்டாமென திராவிடக் கட்சிகள் கெஞ்சல்!
''பாலை இப்படி வீணாக்கிட்டாளே ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.
''என்ன விஷயம்ன்னு விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''மதுரை ஆவின் நிறுவனத்துல, போன மாசம், 'டேங்கர்' மற்றும் பால் கலன்களில் இருந்த, 38 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப் போயிடுத்தாம் ஓய்...
''ஈரோடு ஆவின் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள், மதுரையில ஆய்வு நடத்தி, அதை உறுதி பண்ணியிருக்கா... அதனால, அந்தப் பாலை எல்லாம் கொட்டிட்டா ஓய்...
''ஒரு லிட்டர் பதப்படுத்தப்பட்ட பால், 45 ரூபாயாம்... கணக்கு பார்த்தா, தலை சுத்தறது... விஷயம் என்னன்னா, இவ்வளவு பெரிய தப்பு நடந்தும், இதற்கு பொறுப்பான பராமரிப்பு பிரிவு அதிகாரி உட்பட, யார் மீதும் ஒரு சின்ன நடவடிக்கை கூட இல்லை ஓய்...
''இந்த நஷ்டக் கணக்கை எப்படி மறைக்கிறதுன்னு, மதுரை ஆவின் அதிகாரிகள் யோசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''வரவு - செலவு கணக்கு கேட்டதால, ரெண்டா உடைஞ்சிருச்சு பா...'' என்றபடியே, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''எம்.ஜி.ஆர்., கதையா இருக்கே ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''இது, அ.தி.மு.க., கதையில்லை... தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கத்தின் கதை பா...
''இந்தச் சங்கத்தின், மாநில பொதுச் செயலரா இருக்கற நந்தகுமாருக்கும், துணை பொதுச் செயலரா இருந்த ஸ்ரீதருக்கும் முட்டல் ஏற்பட்டுருக்கு பா...
''சங்கத்துல, 20 ஆண்டுகளாக வரவு - செலவு கணக்கு எதையும் காட்டலை... நந்தகுமார், தன்னிச்சையா முடிவு எடுக்கிறாருன்னு, ஸ்ரீதர் குற்றம் சாட்டினாரு... இதனால், ஸ்ரீதர் மற்றும் அவரது ஆதரவாளர்களை, சங்கத்தில் இருந்து நீக்கிட்டாங்களாம் பா...
''அப்புறம் என்ன... ஸ்ரீதர் தலைமையில, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர் சங்கம் உதயமாகியிருக்கு... எங்களிடம் தான், அதிக தனியார் பள்ளி நிர்வாகிகள் இருக்காங்கன்னு, 'கெத்து' காட்டுறாராம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''ரஜினி கட்சிக்கு, யார் யாரு தாவ போறான்னு கண்காணிக்காவ வே...'' என, கடைசித் தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''எதிர்பார்த்தது தான்... நீங்க மேல சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''நடிகர் ரஜினி, அரசியல் கட்சி தொடங்குறது உறுதியாகிருச்சு... அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஓரம் கட்டப்பட்ட பிரமுகர்கள், ரஜினி கட்சிக்கு தாவ முடிவு பண்ணியிருக்காவ வே...
''தி.மு.க.,வுல, கடும் கண்காணிப்பு நடக்குதாம்... அடுத்த, தி.மு.க., ஆட்சி தான், அதனால கட்சி தாவுனா, பலனிருக்காதுன்னு சொல்லி, ஆட்களை தக்க வைக்காவ வே...
''அ.தி.மு.க.,வுல இருந்து தான், பலர் கட்சி தாவ முடிவு பண்ணியிருக்காவ... அவர்களை பற்றிய விபரங்களை, உளவுத்துறை சேகரிக்குது...
''வர்ற தேர்தல்ல, ரஜினியோட கூட்டணி வைப்போம்; எனவே, கட்சி மாறாதீங்கன்னு, அதிருப்தியில இருக்குறவங்ககிட்ட, அ.தி.மு.க., தலைவர்கள் சொல்லிட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''அரசியல்ல இதெல்லாம் சகஜம் பா...'' என்றபடியே, அன்வர் பாய் நடையைக் கட்ட, நண்பர்களும் கிளம்பினர்.
ஒரு தொகுதிக்கு தலையால் தண்ணி குடிக்கும் காம்ரேட்கள்!
''பொள்ளாச்சிக்கு வந்தவங்க, பழைய கட்சியினரைப் பார்க்காமலேயே போயிட்டாங்க...'' என, விவாதத்தை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.
''யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு, சமீபத்துல, தி.மு.க.,வின் அரசியல் ஆலோசனைக் குழுவான, 'ஐபேக்' டீம் வந்து ஆலோசனை நடத்துச்சுங்க... கட்சி நிர்வாகிகளிடம், சட்டசபை தேர்தல்,
எம்.பி., தேர்தலில் பெற்ற ஓட்டுகள், எந்தந்த வார்டுகளில் ஓட்டு சதவீதம் குறைவாக உள்ளதுங்கிற விபரங்களை கேட்டிருக்காங்க...
''அதோட, தொகுதியில இருக்கிற ஜாதி சங்க நிர்வாகிகள் பட்டியல், தி.மு.க.,வில், 'சீட்' கேட்கும் பிரபலங்கள் பத்தியும், தகவல் விசாரிச்சிட்டு போயிருக்காங்க...
''இவ்வளவு கேட்டவங்க, ம.தி.மு.க.,வைத் துவங்கினப்ப, அந்தக் கட்சிக்கு போகாம, தி.மு.க.,வுலயே இருந்த பழைகாலத்து கட்சியினரைச் சந்திக்காம போயிட்டதால, அவங்க எல்லாம் அதிருப்தியில இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''வாட்ஸ் ஆப்லயே கதியா கிடங்கன்னு அறிவுறுத்தியிருக்காரு பா...'' என, புதியத் தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.
''வித்தியாசமான அறிவுரையா இருக்கே... விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அ.தி.மு.க.,வுல, ஐ.டி., அணியை, நாலு மண்டலங்களா பிரிச்சு, நிர்வாகிகள் போட்டிருக் காங்கல்ல... மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட, தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மதுரையில சமீபத்துல நடந்துச்சு பா...
''இதுல, மண்டல செயலர் ராஜ்சத்யன் கலந்துக்கிட்டாரு... 'இன்னைக்கு எல்லார்கிட்டயும், 'வாட்ஸ் ஆப்' இருக்குது... கட்சி பேதமில்லாம, எல்லாரது நம்பர்
களையும் வாங்கி, அரசின் சாதனைகளை பரப்புங்க... தி.மு.க., தலைவர் ஸ்டாலின் புகாருக்கு உடனே பதிலடி தந்து, மீம்ஸ்களை போடுங்க... இதுக்காக, தினமும் காலை, மாலைன்னு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி, செயல்படுங்க'ன்னு உத்தரவு போட்டிருக்காரு பா..
.''இதுக்காகவே, மதுரையில, 50 பேர் அடங்கிய ஒரு அலுவலகத்தையும் அமைச்சிருக்காரு... இதுக்கு, கணிசமான தொகையும் ஒதுக்கியிருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''மாவட்டத்துல ஒரு தொகுதியாவது வாங்கிடணும்னு கங்கணம் கட்டி செயல்படுதாவ வே...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார், அண்ணாச்சி.
''எந்தக் கட்சியினரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திண்டுக்கல் தொகுதியில, மார்க்சிஸ்ட் கட்சி சார்புல, பாலபாரதி மூணு முறை, எம்.எல்.ஏ.,வா இருந்தாங்க... இப்ப, தி.மு.க., கூட்டணியில, இந்தத் தொகுதியை மறுபடியும் வாங்கணும்னு, மார்க்சிஸ்ட் கட்சியினர் திட்டமிட்டிருக்காவ வே...
''அதனால, தொகுதியில, தினமும் ஏதாவது ஒரு ஆர்ப்பாட்டம், போராட்டத்தை நடத்திட்டு இருக்காவ... இதுக்கு இடையில, இந்த முறை பழநி தொகுதியை, மார்க்சிஸ்ட் கட்சிக்கு குடுத்துரலாம்னு, தி.மு.க., தலைமையில பேச்சு அடிபடுதாம்...
''அதனால, பழநி மார்க்சிஸ்ட் கட்சியினரும், அங்கயும் தங்கள் போராட்டத்தை தீவிரமா நடத்தி, மக்கள் மத்தியில, தங்களை அடையாளப்படுத்திட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஒருகாலத்துல எவ்வளவு செல்வாக்கா இருந்த கட்சி, இப்படி ஆயிட்டே...'' என, முணுமுணுத்தபடியே அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE