சென்னை: மிழகத்தில் யாரை எதிர்த்து, அரசியல் செய்யப் போகிறோம் என்பதை, நடிகர் ரஜினி, தனக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துள்ளார். ரஜினி மனம் திறந்து பேசியதை, அவரது கட்சி மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், நேற்று வெளியிட்டார்.
நடிகர் ரஜினி, அடுத்த மாதம் கட்சி துவங்கப் போவதாக அறிவித்துள்ளார். அதற்கான ஆயத்தப் பணிகளை துவக்க, மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப் பாளராக அர்ஜுனமூர்த்தி ஆகியோரை நியமித்துள்ளார்.அவர்கள் இருவரும், நேற்று ரஜினியை, சென்னையில் அவரது வீட்டில் சந்தித்து, கட்சிப் பணிகள் குறித்து ஆலோசித்தனர். அப்போது, தன்னுடைய அரசியல் பாதை எப்படி இருக்கும்; மற்ற அரசியல்வாதிகளிடம் இருந்து, எப்படி தனித்து செயல்படுவேன் என்பதை, ரஜினி மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது, அவர் கூறியுள்ளதாவது: தி.மு.க., - அ.தி.மு.க., தவறுகளை பேசி, மக்களிடம் ஆதரவு கேட்க வேண்டியதில்லை. நாம் துவங்குவது, ஆன்மிக அரசியல். அதாவது நேர்மறை அரசியல்; எதிர்மறை அரசியல் தேவையில்லை. மாற்று கட்சியினர் கூறுவதற்கு, நாம் எதிர்வினையாற்ற வேண்டியதில்லை. தமிழகத்தில், தற்போது வெறுப்பு அரசியல் நடக்கிறது. ஒருவரை இழித்து பேசுவது தான், அரசியல் என்றாகி விட்டது. இந்நிலையை மாற்ற வேண்டும்.
மற்றவர்கள் குறித்து, எந்த கருத்தும் கூற மாட்டேன். நான் வந்தால், இதை செய்வேன். இதற்காக, அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறேன். என் மீது பரிபூரண நம்பிக்கை இருந்தால், என் பின்னால் வாருங்கள் என்று தான், மக்களை அழைப்பேன்.மற்றவர்களுக்கு எதிராக, விமர்சன கணையை வீசுவதும், அதன் வழியே, கட்சியை பலப்படுத்துவதும், மற்றவர்கள் செய்த அரசியல். அதை நாம் செய்யக் கூடாது. நாம், அனைவரையும் அரவணைக்கும் ஆன்மிக அரசியலில் ஈடுபட வேண்டும்.
ஆன்மிகத்திற்கு மதம் கிடையாது. உலகில் உள்ள உயிர்கள் அனைத்திலும், தன்னை காண்பதும், உலகில் உள்ள உயிர்களை தன்னுள் காண்பதும் தான் ஆன்மிகம். ஆன்மிகவாதிக்கு ஜாதி, மதம் கிடையாது. மண்ணில் பிறந்த அனைவரையும், அன்பால் அரவணைத்து செல்வது தான் ஆன்மிக அரசியல்.இவ்வாறு, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை, ரஜினி தெளிவுப்படுத்தி உள்ளார்.
இது குறித்து, ரஜினியுடனான சந்திப்புக்கு பின், தமிழருவி மணியன் அளித்த பேட்டி:
கட்சி துவங்கும் தேதியை, டிச., 31ல், ரஜினி அறிவிப்பார். கட்சிக்கு அவர் தலைமை தாங்குகிறார். எனவே, கட்சி தொடர்பான, அனைத்து செய்திகளையும், அவர் தெரிவிப்பார். கட்சியின் கொள்கை, கொடி, சின்னம் குறித்து ஆலோசித்துள்ளோம்.கட்சியின் அடிப்படை கட்டமைப்பு, செயல் திட்டங்கள் போன்றவை குறித்து, விரிவாக பேசி உள்ளோம். முதல்வர் வேட்பாளர் குறித்து விவாதிக்கவில்லை.ரஜினி கட்சியை துவங்கிய, அடுத்த கணமே, ஒட்டுமொத்த தமிழகத்தில், பெரும்பாலான வாக்காளர்கள், இயல்பாகவே அவர் பின்னால் குவிந்து விடுவர்.
தமிழகத்தில் பேரெழுச்சியை சந்திக்க போகிறீர்கள். அவர், எந்த இடத்தில் போட்டியிடுவது என்பதை, நான் கூற முடியாது.ரஜினி கட்சி துவக்கியதால், எங்களுக்கு பாதிப்பு என்று, எந்த கட்சியினரும் வெளிப்படையாகக் கூற மாட்டார்கள். பாதிப்பு இல்லை என, கூறும்போதே, அவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது, வெளிப்படையாக தெரிகிறது.குறிப்பிட்ட மதம் சார்ந்தோ, குறிப்பிட்ட மதங்களுக்கு எதிராகவோ, ரஜினி செயல்பட மாட்டார். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும், அவர் கடன்பட்டிருக்கிறார். ஆன்மிக அரசியலுக்கும், மத அரசியலுக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது. மத அரசியல் கண்ணாடியை கழற்றி விடுங்கள். அவர் நடத்தவிருப்பது, ஆன்மிக அரசியல்.
ரஜினி, புதிதாக ஆன்மிக அரசியலை கண்டெடுக்கவில்லை. இது, காந்தியடிகள் கண்டுபிடித்தது. முதன் முதலில், காந்தியடிகள், 'ஆன்மிக அரசியல்' என்றார். ஆன்மிக அரசியலில், சொந்த நலனுக்கு இடமில்லை. மக்கள் நலன் தான் முக்கியம். அதை செய்ய, ரஜினி வருகிறார்.
தமிழக வாக்காளர்கள், அவர் எப்போது வருவார் என, ஏக்கத்தோடு உள்ளவர்கள், அவரோடு இணைந்து, மாற்று அரசியலை ஏற்படுத்துவர். ஆட்சி நாற்காலியை நோக்கி, அவரை அழைத்து செல்வர். அதற்கு பெயர் தான் அதிசயம்; அற்புதம்!ரஜினி கட்சி துவக்கும் போது, காந்திய மக்கள் இயக்கத்தை, அதனுடன் இணைத்து விடுவோம். கட்சி துவக்கும்போது, எங்களின் சொத்துப் பட்டியல் வெளியிடப்படும்.எம்.ஜி.ஆருக்கு பின்னால் நின்றவர்கள், 100 சதவீதம், ரஜினி பின்னால் நிற்பர். இவ்வாறு, அவர் கூறினார்.
அரசியல் பரபரப்பில் மீண்டும் போயஸ் கார்டன்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை, போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வந்தார். எனவே, அப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்கு எடுக்கப்படும் முடிவுகள், தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தி வந்தன.கட்சி தொண்டர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் என, அப்பகுதியே களை கட்டும். ஜெ., மறைவுக்குப் பின், அப்பகுதி களையிழந்திருந்தது.தற்போது, போயஸ் கார்டன் பகுதியில் வசிக்கும் ரஜினி, அரசியல் கட்சி துவங்கப் போவதாக அறிவித்ததில் இருந்து, மீண்டும் அப்பகுதி, அனைவராலும் கவனிக்கப்படும் பகுதியாக மாறியுள்ளது.ஜெ.,வை போல், போயஸ் கார்டன் பகுதியில் இருந்து, ரஜினி எடுக்கும் முடிவுகளும், தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE