உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: 'ரஜினி, அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா' என, நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த விவாதத்திற்கு, முடிவு கிடைத்து விட்டது. இதோ, அரசியலுக்கு வந்து விட்டார். ரஜினிக்கு இது, அக்னிப் பிரவேசம்! ரஜினி அரசியலுக்கு வருவது, ரசிகர்களுக்கு மட்டுமின்றி, நடுநிலையாளர்
களுக்கும், இரு திராவிடக் கட்சிகள் மீது வெறுப்பில் உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்து
உள்ளது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு இருந்தது போல, தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும், ரஜினிக்கு செல்வாக்கு உள்ளது. அதை, அரசியலுக்கு எப்படி பயன்படுத்திக் கொள்ள போகிறார் என்பதில் தான் இருக்கிறது, ரஜினியின் சாமர்த்தியம். கடந்த அரை நுாற்றாண்டாக, இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாறி, மாறி ஓட்டளித்தது போதும். மாற்று அரசியலை வரவேற்க, மக்கள் முன்வர வேண்டும். இந்த இரு திராவிடக் கட்சிகளும், நம் பிள்ளைகளை, மது போதைக்குஅடிமையாக்கி விட்டன. இன்று, பள்ளி மாணவர் கூட, மது அருந்துகிறார் என்றால், தமிழகம் மோசமான நிலையை அடைந்துள்ளது என்று தான் அர்த்தம். தமிழகத்தில், 47 சதவீத ஆண்கள், மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். அவர்களின் குடும்பம், தினமும் தவித்து வருகிறது.
உங்கள் தெருவில், ஒரு சின்ன, 'சர்வே' எடுத்து பாருங்கள்... 10 ஆண்களில், நான்கு பேர்
குடிகாரர்களாக இருப்பர். அந்தளவிற்கு, மது புழக்கம் உள்ளது. அதேபோல, கழகங்களின் ஆட்சியில் லஞ்சம், ஊழல் பெருக்கெடுத்தது என்பதையும், யாரும் மறுக்க முடியாது. அரசு துறையின்
கடைநிலை ஊழியர் முதல், அமைச்சர் வரை, ஊழல் பெருகியுள்ளதை, நாம் அறிவோம். கொஞ்சம் நேர்மையான ஆட்சி நடந்திருந்தால், தமிழகம் வளர்ச்சி பெற்றிருக்கும்; அனைத்துத்
துறைகளிலும் முன்னேறி இருக்கும். ஆனால், இந்த ஊழல் மற்றும் லஞ்சத்தால், தமிழகத்தை ஆண்ட அரசியல்வாதிகள் தான், பெரும் வளர்ச்சி அடைந்தனர்; ஏழேழு தலைமுறைக்கு தேவையான சொத்து குவித்துள்ளனர்; குடும்ப அரசியலை வளர்த்தனர்.

கழகங்கள் அடித்த கொள்ளையை பட்டியலிட்டால், அது நீண்டு கொண்டே போகும். தரமற்ற சாலை, சுகாதாரமற்ற குடிநீர், அடிப்படை வசதியில்லாத அரசு மருத்துவமனை போன்றவை தான், கழகங்கள் ஆட்சியில், தமிழகம் கண்ட பலன். மக்களை, ஓட்டுக்கு பணம் கேட்டு, பிச்சை எடுக்க செய்தும்; இலவசங்களுக்கு ஏங்க வைத்தும் பழக்கினர். இந்த நிலை மாற வேண்டும். அதற்காக, ரஜினியை நாம் வரவேற்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE