புதுடில்லி : மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று கொள்ள வேண்டும் இல்லையென்றால், ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருதை திருப்பி அளிப்பேன் என குத்துச்சண்டை வீரரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி - ஹரியானா எல்லையில் பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 5 கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தும் முடிவு எடுக்கப்படாத நிலையில் 9ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்நிலையில், பிரபல குத்துச்சண்டை வீரரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான விஜேந்தர் சிங், போராட்டம் நடக்கும் இடத்திற்கு நேரில் சென்று விவசாயிகளின் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது அவர், வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், எனக்கு அளிக்கப்பட்ட ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி அளிப்பேன் என தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய விஜேந்தர் சிங், பஞ்சாபில் பயிற்சி பெற்றவன் நான். குளிர்காலத்தில் டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலையில், சகோதரன் என்ற முறையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளேன். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தடகள வீரர்களும் போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளனர். அரசு பணியில் உள்ளதால், அவர்களால் நேரில் வர முடியவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE