சென்னை:'மழை சேத மதிப்பீடுகளை உரிய முறையில், மத்தியக்குழுவிடம் எடுத்துச் சொல்வதோடு நின்று விடாமல், மத்திய அரசிடம் உரிய நிதியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள் உறுதுணையாக இருப்பர்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:புயல், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அரசு இயந்திரம், முழு வீச்சில் இறங்கி, மீட்புப் பணிகளில் இதுவரை ஈடுபடவில்லை.மத்தியக்குழு வெள்ள சேதங்களை பார்வையிட வந்துள்ளது. இதுவரை வந்த பல குழுக்கள், சேதங்களை பார்வையிட்டு, நிதி வழங்க பரிந்துரைத்தது. ஆனால், நிதி வந்ததா என்றால் இல்லை.அந்த நிலை, மீண்டும் தமிழகத்தில் நிகழக் கூடாது. அதனால், மத்திய குழுவிடம், உரிய முறையில் சேதங்களை விளக்கி, நிதி பெற அ.தி.மு.க., அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பாதிப்பில் இருந்து, மக்களை பாதி அளவுக்காவது மீட்க முடியும்.
சென்னை புறநகர் பகுதிகள், இன்னும் கன மழை பாதிப்பில் இருந்து மீண்டதாக தெரியவில்லை. கொரோனா காலத்தில், கழிவு நீர் நிற்பதால், சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. சென்னையுடன் இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம், 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.சென்னை புறநகரில் வசிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கும், பேரின்னல்களுக்கும், உள்ளாகியுள்ளனர். ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்திருக்கின்றனர். ஆனால், திட்டம் நிறைவேறவில்லை என்பது அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும், உடனே நிதியுதவி வழங்க வசதியாக, மாநில அரசின் சார்பில், முதல் கட்டமாக முதல்வர் இ.பி.எஸ்., நிதி ஒதுக்க வேண்டும். சேத மதிப்பீடுகளை உரிய முறையில், மத்தியக்குழுவிடம் எடுத்துச் சொல்வதோடு நின்று விடாமல், மத்திய அரசிடம் உரிய நிதியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள் உறுதுணையாக இருப்பர்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவாரூர், நாகை விவசாயிகளுக்கு ஆறுதல்
திருவாரூர், நாகை மாவட்டங்களில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு, கிராம மக்களுக்கு ஆறுதல் கூறினார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று முன்தினம் இரவு திருவாரூர்வந்தார். திருவாரூர் சன்னிதி தெருவில், அவரது இல்லத்தில் தங்கினார்.நேற்று காலை, திருவாரூர் அருகே, அம்மையப்பன், காவனுார், தாழைக்குடி, கருப்பூர் ஆகிய கிராமங்களில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, கிராம மக்களை சந்தித்து, ஆறுதல்கூறி, நிவாரண பொருட்கள் வழங்கினார்.
தொடர்ந்து, கச்சனம் அரசு மேல்நிலை பள்ளியில் தங்கியுள்ள மக்களை சந்தித்து, மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். முகாமில் தங்கிருந்தவர்களுக்கு, நிவாரணப் பொருட்கள் வழங்கினார். பின், நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள தங்களது பூர்வீக வீட்டிற்கு சென்ற ஸ்டாலின், முத்துவேலர், அஞ்சுகம், கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, வேளாங்கண்ணி அருகே மேலப்பிடாகை என்ற இடத்தில், மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்டார். அவரிடம், மழை நீரில் மூழ்கிய சம்பா பயிர்களை விவசாயிகள் காட்டினர். மழை பாதிப்பு குறித்து, விவசாயிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து, காரைக்கால் வழியாக திருவெண்காட்டுக்கு சென்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE