பீஜிங்: சீனாவின், 'சாங் இ5' விண்கலம், நிலவில் தரைஇறங்கி, அங்கிருந்து கல், மண் உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்து, அதை பூமிக்கு திரும்பும், 'ஆர்பிட்டர் ரிட்டனர்' இயந்திரத்துக்கு வெற்றிகரமாக இடம் மாற்றிய தகவலை, சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உறுதி செய்தது.

நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து வந்து, அதை பரிசோதிக்கும் பணியினை, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் வெற்றிகரமாக செய்துள்ளன. இந்த வரிசையில், மூன்றாவது நாடாக இடம்பிடிக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதையடுத்து, நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து வருவதற்காக, 'சாங் இ5' என்ற விண்கலத்தை, கடந்த மாதம், 24ல், சீனா ஏவியது.
இந்த விண்கலத்தில், 'ஆர்பிட்டர், லாண்டர், அசெண்டர், ரிட்டனர்' கருவிகள் உள்ளன. இந்த விண்கலம், கடந்த, 1ம் தேதி, நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அதில் இருந்து, 'அசென்டர்' என்ற கருவி, வெற்றிகரமாக பிரிந்து சென்று, நிலவில் இருந்து, கல், மண் உள்ளிட்ட, 2 கிலோ மாதிரிகளை சேகரித்தது.பின், அவற்றை, 'ஆர்பிட்டர் ரிட்டனர்' என்ற கருவியில் நேற்று காலை சேர்த்துவிட்டது.

இந்த ரிட்டனர் கருவி, நிலவில் இருந்து புறப்பட்டு, பூமியை வந்தடையும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனை, சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உறுதி செய்துள்ளது.இதற்கிடையே, பூமியை துல்லியமாக கண்காணித்து, உயர்தர புகைப்படங்களை அனுப்பும், 'கவோபென்14' என்ற செயற்கைக்கோளை, சீனா நேற்று விண்ணில் ஏவியது.தென்மேற்கு சீனாவின், சிசுவான் மாகாணத்தில் உள்ள, ஸிசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்தில் இருந்து, 'லாங் மார்ச் 3பி' ராக்கெட் வாயிலாக, இந்த செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE