புதுடில்லி: இந்தியாவில், தாங்கள் உருவாக்கிய கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை, அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி கோரி, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம், 'பைசர்' நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
பரிசோதனைஅமெரிக்காவை தலைமையிடமாக வைத்து இயங்கும் பைசர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி மருந்து, இறுதி கட்ட பரிசோதனைகளின்போது, 30 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது. அந்த தடுப்பூசி மருந்து, 95 சதவீதம் செயல்திறனுடன் இருப்பது, கடந்த மாதம் வெளியான பரிசோதனை முடிவுகள் வாயிலாக தெரிய வந்தது. இந்த தடுப்பூசியை, ஜெர்மனியின், 'பயோ என் டெக்' நிறுவனம், உற்பத்தி செய்து வருகிறது.
அமெரிக்காவில், இந்த தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி கோரி, எப்.டி.ஏ., எனப்படும், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம், பைசர் நிறுவனம் விண்ணப்பித்தது. இதுவரை, அதற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை.அனுமதிஎனினும், இந்த தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த, பைசர் நிறுவனத்திற்கு, பிரிட்டன் அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, பாரசீக வளைகுடா நாடான பக்ரைனும், இதற்கு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், இந்தியாவிலும், பைசர் நிறுவனம் இதற்காக விண்ணப்பித்துள்ளது. டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம், அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.இது குறித்து, மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில், கொரோனாவுக்கான தடுப்பூசியை, அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு அனுமதி கோரி, டி.சி.ஜி.ஐ.,யிடம், 'பைசர் இந்தியா' நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.நாட்டில், தடுப்பூசிகளை இறக்குமதி செய்து, அவற்றை வினியோகம் செய்யவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE