திருப்பூர்:சட்டசபை தேர்தல் நெருங்குவதால், வாக்காளர்களை கவர, திருப்பூரில், அரசியல் கட்சியினர் தற்போதே களமிறங்க துவங்கியுள்ளனர்.தமிழகத்தில், அடுத்தாண்டு, சட்டசபை தேர்தல் நடக்கிறது. சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர்கள் பெயர் பட்டியல் விவரம் மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல சிறப்பு முகாம் நடத்தப்பட்டும் வருகிறது. இதில், வாக்காளர் சேர்க்கை, நீக்கம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கான களப்பணிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., உட்பட கட்சிகள் மேற்கொள்ளத் துவங்கி விட்டனர். அரசியல் கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர், வாக்காளர்களை வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.முக்கிய நிர்வாகிகள் பலர், கட்சி நிர்வாகிகள் மற்றும் தங்கள் ஆதரவாளர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொள்கின்றனர். பல பகுதிகளில், மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெறும் நோக்கில், இரு கட்சியினரும் மக்களின் தீராத பிரச்னை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரும் நோக்கில் முனைப்பு காட்டுகின்றனர்.இந்நிலையில், ரஜினியும் கட்சி துவங்க உள்ளதால், இவரது ரசிகர்களும், தற்போதே களமிறங்கத் துவங்கியிருக்கின்றனர்.
பா.ஜ., - காங்., - கம்யூ., கட்சிகளும், இதற்கான ஆயத்தத்தை துவங்கியுள்ளனர். தே.மு.தி.க., - த.மா.கா., - பா.ம.க., மற்றும் கமலின் ம.நீ.ம., நிர்வாகிகளும் வரிந்து கட்டுகின்றனர்.அரசியல் கட்சியினர் கூறுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில், தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே, பிரதான கட்சியினர், கவனம் செலுத்த துவங்கி விடுவோம். ஊரடங்கு காரணமாக, இந்த முறை, தாமதமாகியுள்ளது.அரசியல் கட்சி முகவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
கிராமங்களில் துவங்கி மாநகரம் வரை வார்டு வாரியாக வீடு, வீடாக, வாக்காளர்களை தொடர்பு கொள்வதற்கென குழுக்களை, ஒவ்வொரு அரசியல் கட்சியினருமே அமைக்கத் துவங்கியுள்ளனர்'' என்றனர்.வீடு, வீடாக வாக்காளர்களை நாடி தற்போதே அரசியல் கட்சியினர் வரத் துவங்கியுள்ளதால், வாக்காளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இருப்பினும், 'தேர்தல் நேரத்தில் தான் தங்களை கட்சியினர் 'கண்டுகொள்வதாக' குற்றஞ்சாட்டுகின்றனர்.அரசியல் கட்சியினர் தங்களிடம் ஓட்டு கேட்பது, தங்களுக்கு கவுரவமாக உள்ளதாகவும், வியப்பாக இருப்பதாகவும், இளம் வாக்காளர்கள் கூறுகின்றனர். மேலும், பெண் வாக்காளர்கள், குறிப்பாக, குடும்பத்தலைவியரிடம் ஓட்டு கேட்க, அரசியல் கட்சிகளின் மகளிர் குழுக்கள், தீவிரமாக களமிறங்கிவருகின்றன.இதற்கிடையே பிரதான கட்சிகளில் 'சீட்' வாங்குவதற்காக, நிர்வாகிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE