திருக்கோவிலுார் : சீரமைப்பு பணி நடைபெற்று வந்த திருக்கோவிலுார் உயர்மட்ட பாலம் திடீர் என இருசக்கர வாகன போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.
திருக்கோவிலுாரையும், மணம்பூண்டியையும் இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் உள்ளது. 60 ஆண்டுகள் பழமையான இப்பாலத்தின் சீரமைப்பு பணி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. ஆமை வேகத்தில் பணி நடந்துவந்தது. இதனால் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.
கனமழை காரணமாக தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளதால் அதிகரித்துவிட்ட போக்குவரத்தின் காரணமாக, தரைப்பாலம் எந்த நேரத்திலும் பாதிக்கப்படலாம் என்பதுடன் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொதுமக்கள் நீரில் அடித்துச் செல்லும் அபாயம் எழுந்தது.இதன் காரணமாக தென்பண்ணையின் இரண்டு பகுதியிலும் இருக்கும் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தரை பாலத்தை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக தரைப்பாலத்தில் இரண்டு பக்கமும் இரண்டு மாவட்ட போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி 24 மணி நேர கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட ஏ.டி.எஸ்.பி., சங்கர் நேரில் ஆய்வு செய்து தரை பாலத்தின் வழியாக நடந்து செல்பவர்களைக்கூட அனுமதிக்கக்கூடாது என கடுமையாக உத்தரவை பிறப்பித்தார்.
இதன் காரணமாக நடந்து செல்பவர்கள் புறவழிச்சாலை உயர்மட்ட பாலத்தின் வழியாக ஏழு கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.சீரமைப்பு பணி நடைபெற்று வந்த உயர்மட்ட பாலம் தற்காலிகமாக திறக்கப்பட்டு, இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE