அடுத்தடுத்த புயல்களால், வெள்ள சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர், இரண்டு குழுக்களாக பிரிந்து, நேற்று முதல் ஆய்வு பணியை துவக்கியுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான, 'நிவர்' புயல், நவ., 25ல், புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயல் மற்றும் கனமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.இந்த பாதிப்புகளை மதிப்பீடு செய்து, நிவாரணம் வழங்குவதற்காக, மத்திய அரசு, மத்திய உள்துறை இணை செயலர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான குழுவை, நேற்று முன்தினம், தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது.
இந்த குழுவில், மத்திய வேளாண் துறை எண்ணெய் வித்துக்கள் வளர்ச்சி இயக்குனர் மனோகரன், மத்திய சாலை போக்குவரத்து துறை மண்டல அதிகாரி ஜெய்சிங், மத்திய நிதித் துறை இயக்குனர் குமார் சிங் இடம் பெற்றுள்ளனர்.மேலும், மத்திய மின்சார குழும துணை இயக்குனர் ஓ.பி.சுமன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் தர்மவீர் ஜா, மத்திய மீன்வள ஆணையர் பால் பாண்டியன், சென்னை மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு இயக்குனர் ஜெ.ஹர்ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.ஆய்வு துவக்கம்இக்குழுவினர், நேற்று முன்தினம் தலைமை செயலர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இரண்டு குழுக்களாக பிரிந்து, நேற்று முதல், வெள்ள சேதங்களை குறித்த ஆய்வை துவக்கினர்.வழிகாட்டு அதிகாரிகளாக, ஒரு குழுவிற்கு தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மற்றொரு குழுவிற்கு, பொதுப்பணித் துறை செயலர் மணிவாசன் ஆகியோர் உடன் சென்றனர்.மத்திய குழுவினர், திருவள்ளூர் மாவட்டம் சென்றனர். அத்திப்பட்டு, நெய்தவாயல் கிராமங்கள்; பொன்னேரியை அடுத்த, தத்தமஞ்சியில், ஆரணி ஆற்றின் கரைகள் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
ஆய்வு குழுவினரை சந்தித்து முறையிட, வஞ்சிவாக்கம், ஆண்டார்மடம் கிராம மக்கள் காத்திருந்தனர்.ஆனால், அவர்களை சந்திக்காமல் மத்திய குழுவினர் சென்றதால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆவடி, பருத்திப்பட்டு, வசந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, கலெக்டர் பொன்னையாவிடம் கேட்டறிந்தனர்.மத்திய குழுவினர், காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் ஆய்வு நடத்தினர். இங்கு, 30 படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லபட்டன; ஏராளமான படகுகள் சேதமடைந்தன. சேதமடைந்த படகுகள் சேதம் குறித்து, அதன் உரிமையாளர்களிடம், குழுவினர் கேட்டறிந்தனர்.பின், எண்ணுாரில், பக்கிங்ஹாம் கால்வாய், புழல் ஏரி உபரி நீர் கால்வாய், கொசஸ்தலை ஆறு முகத்துவாரம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.சென்னையில் நேற்றுகாலை, வேளச்சேரி, ராம்நகர் பகுதி மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதிகளையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர். காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், 4,723 ஏக்கர் நெற்பயிரும், 127 ஏக்கர் தோட்டக்கலை பயிரும் சேதமாகி உள்ளன.சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சந்தவேலுார் கிராமத்தில், 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட வாழை தோப்பு; காஞ்சிபுரத்தை அடுத்த, விஷார், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களையும் குழுவினர் பார்வையிட்டனர். செங்கல்பட்டுசெங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம், பெரும்பாக்கம், நுாக்கம்பாளையத்தில் உள்ள பாலம் மற்றும் இரும்புலிச்சேரி பாலாற்றில் பாலம் சேதம்; செய்யூர் அடுத்த, வெடால் பகுதியில், நெற்பயிர்களில் மழை நீர்சூழந்த பகுதிகளையும், மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.தாம்பரம் - முடிச்சூர்சாலையில், புதிதாக கட்டிய, மூடுதளத்துடன் கூடிய கால்வாய்களையும்; கல்பாக்கம் அடுத்த, பூந்தண்டலம் பகுதி, நெற்பயிர் சேத பாதிப்புகளையும் பார்வையிட்டனர்.அப்போது, பாதிப்பு குறித்தும், சாகுபடிக்கான செலவு குறித்தும், மத்திய குழுவினரிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.
இரும்புலிச்சேரி --நெரும்பூர் தற்காலிக பாலாற்று மண் பாதை பாலம் சேதமடைந்து விட்டதால், புதிய பாலம் அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.மத்திய குழுவினர் இன்று கடலுார், விழுப்புரம், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் ஆய்வை தொடர உள்ளனர்.ஆய்வை முடித்து, நாளை, சென்னையில், முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அதிகாரிகளை, மத்திய குழுவினர் சந்திக்க திட்டமிட்டு உள்ளனர்.-சேதமான சாலைகள்படம் காட்டி விவரிப்புசென்னையில் சாலைகளில் ஏற்பட்ட சேதம் குறித்து, வேப்பேரியில் மத்திய குழு பார்வையிட்டது.
மழையால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான புகைப்படங்களை, பலகையில் ஒட்டி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவண செல்வம், சாலையின் பிளாட்பாரத்திலேயே மத்திய குழுவினருக்கு விளக்கினார்.இதை, மத்திய குழு அதிகாரிகள் குறிப்பெடுத்து கொண்டதுடன், தங்களது மொபைல்போனிலும் புகைப்படமாக பதிவு செய்து கொண்டனர்.
- நமது நிருபர் குழு -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE