'ஓவர் ஆட்டம் உடம்புக்கு ஆகாது என, கூறினால் கேட்கிறாரா... இப்போது அனுபவிக்கட்டும்...' என, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவுக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்து, எரிச்சலுடன் கூறுகின்றனர், அந்த மாநில அரசியல்வாதிகள். ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவானதில் இருந்தே, சந்திரசேகர ராவ் ஆடிய ஆட்டம், கொஞ்சம் நஞ்சமில்லை. தனி மாநிலம் என்பதை, தனி நாடு என, அவர் நினைத்து விட்டார் போலிருக்கிறது. 'தெலுங்கானாவுக்கே, நான் தான் ராஜா' என்பது போல், சர்வாதிகாரியாகச் செயல்பட்டார்.
நல்ல நிலையில் இருந்த அரசுக் கட்டடங்களை, வாஸ்து நிபுணர்களின் யோசனைகளைக் கேட்டு இடித்து, புதிய கட்டடம் கட்டி, மக்களின் வரிப்பணத்தை வீணடித்தார். கேள்வி கேட்கவே, யாரும் இல்லை என்ற சூழலை உருவாக்கினார். சமீபத்தில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலும், ஐதராபாத் மாநகராட்சி தேர்தலும், அவரது ஆட்டத்தை அடக்கி விட்டன. தெலுங்கானாவில் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலை என்ற சூழலை முறியடித்து, பா.ஜ., இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்றது; மாநகராட்சி தேர்தலில், இரண்டாவது இடத்தை பிடித்தது.
இந்த தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து, துாக்கத்தை தொலைத்து விட்டார் சந்திரசேகர ராவ். 'கோடிக்கணக்கில் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும் அல்லவா... அதனால் தான், அலறுகிறார் சந்திரசேகர ராவ்' என்கின்றனர், தெலுங்கானா மக்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE