ரா.கீர்த்திப்ரியன், துடியலுார், கோவை
மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபா தேர்தலில்,
தொடர்ந்து இரு முறை, பா.ஜ., வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைத்துள்ளதை
அடுத்து, 'ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் மோசடி நடக்கிறது; ஓட்டுச் சீட்டு
முறையில் தான் தேர்தல் நடத்தணும்' என, சிலர் புலம்புகின்றனர்.நல்ல வேளை...
பழையபடி, குடவோலை முறைப்படித் தான், தேர்தல் நடத்தணும் என, சொல்லாமல்
விட்டனரே!
தேர்தலில் வெற்றி பெற்றால், 'மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு'
என, கொண்டாடுவது; தோற்றால், 'ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடி' என,
புலம்புவது தான், அரசியல் கட்சிகளின் வழக்கம்.தற்போது, வட மாநிலங்களில்
நடக்கும் சட்டசபை மற்றும் இடைத் தேர்தல்களில், பா.ஜ., வெற்றி பெற்று
வருகிறது. திரும்பவும், ஓட்டுப்பதிவு இயந்திரம் என்ற பல்லவியை,
எதிர்க்கட்சிகள் பாடி வருகின்றன.
கடந்த, 1971ல் நடந்த தேர்தலில், விருதுநகர்
தொகுதியில் போட்டியிட்ட, காமராஜர் தோல்வி அடைந்தார். தொண்டர்கள், அவரிடம்
சென்று, 'ஐயா... அவர்கள் வெற்றிக்கு காரணம், ஓட்டுச் சீட்டில் ரஷ்ய மையைத்
தடவி விட்டனராம்...' என்றனர்.அதற்கு காமராஜர், 'ஜனநாயகத்திலே நம்பிக்கை
உள்ளவர்களின் பேச்சா இது? நாம் தேர்தலிலே தோற்றதற்கு காரணம், மக்கள் நம்மை
ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான்' என்றார்.தோல்வியை ஏற்றுக்கொள்ளும்
மனப்பக்குவம், காமராஜருக்கு இருந்தது; இப்போது இருக்கும்
அரசியல்வாதிகளிடம், அது இல்லை.
தற்போது, ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், நாம்
யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை, அருகில் இருக்கும் கருவியில் காண
முடியும். மேலும், நீங்க ஓட்டு போட்டதற்கான பதிவு, காகிதமாக தரப்படுது.
அதை, நீங்கள் சரி பார்த்த பின், அங்கேயே கிழித்து விட வேண்டும்.ஓட்டு
எண்ணிக்கையின் போது, பதிவுச் சீட்டு எண்ணிக்கையும் ஆய்வு செய்யப்படுகிறது.
இவ்வளவு விதங்களில், ஓட்டுப்பதிவின் உண்மைத்தன்மை உறுதி
செய்யப்படுது.மேலும், ஓட்டுப்பதிவு இயந்திரம், 'ஆன்லைன்' வழியே
இயங்குவதில்லை; அதனால், 'ஹாக்கிங்' எல்லாம் செய்ய முடியாது.
தற்போது,
அமெரிக்காவில் நடந்த தேர்தலில், ஓட்டுச் சீட்டு முறை தான்
பின்பற்றப்பட்டது. ஓட்டு எண்ணிக்கையில் மோசடி என, முன்னாள் அதிபர் டிரம்ப்,
மறு ஓட்டு எண்ணிக்கை வேண்டும் என, வழக்கு தொடுத்தார். மறு எண்ணிக்கையில்,
அவர் பெற்றிருந்ததாக அறிவிக்கப் பட்ட ஓட்டுக்களை விட, மேலும்
குறைந்திருந்தன.எனவே, ஓட்டுச் சீட்டு முறை சந்தேகத்தை கிளப்பிக்கொண்டே
இருக்கும். நம் நாட்டிற்கு, ஓட்டுப் பதிவு இயந்திரமே சரியானது.தேர்தலில்
தோல்வி அடைந்தோர், புலம்பத் தான் செய்வர். அதை கண்டுக்காதீங்க!
வாக்காளர் பட்டியலில் குளறுபடி!
எஸ்.ராமசுப்ரமணியன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
மத்திய, மாநில தேர்தல்
ஆணையங்கள், சரியாக செயல்படுவதில்லை. அக்கறையுடன் தேர்தல்களை நடத்துவதாக,
நடிக்கின்றன. உண்மையில், அலட்சியமாகவே நடத்தி முடிக்கின்றன.நாங்கள்
வசிக்கும், எலிம் நகர் முதல் மெயின் ரோட்டில், 30க்கும் மேற்பட்ட வீடுகள்
உள்ளன. அங்குள்ள, 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும், வாக்காளர் பட்டியலில்
இடம் பெற்றுள்ளனர்.
ஆனால், எங்கள் குடும்பத்தை மட்டும், வர்கீஸ் தெருவிற்கு,
தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது.எலிம் நகரில் இருக்கும் எங்கள் வீட்டை
மட்டும், தேர்தல் ஆணையம் எப்படி வர்கீஸ் தெருவிற்கு துாக்கிச்
சென்றது?மேலும், ஒரு வீட்டில், தந்தைக்கும், மகனுக்கும், 45 வயது என்றே
குறிப்பிடப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியம்?அடுத்தது, தாய்க்கு, 25 வயது;
அவரின் மகனுக்கு, 43 வயது. இந்தக் கொடுமை எல்லாம், தேர்தல் ஆணையத்தில்
நடக்கிறது.இந்தப் பிழைகளை சரி செய்ய, அவர்கள் பல போராட்டங்களை சந்திக்க
வேண்டும்.
தேர்தல் ஆணையம், சம்பந்தப்பட்டோரை அலைக்கழிக்கச்
செய்யும்.ஆசிரியர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளர் விபரங்களை
சேகரித்தபோது, இவ்வளவு குழப்பம் ஏற்பட்டதில்லை. வாக்காளர் பட்டியல்,
கணினிமயமாக்கப்பட்டு, 'அவுட் சோர்சிங்' முறையில், ஆட்களை நியமித்து விபரம்
சேகரிக்கப்பட்ட போது தான், இவ்வளவு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. வாக்காளர்
பட்டியலையே முறையாக, சரியாகத் தயாரித்து வழங்க முடியாத மத்திய, மாநில
தேர்தல் ஆணையங்கள், தேர்தலை மட்டும் எப்படி ஒழுங்காக நடத்தும்?
'ஆல் பாஸ்' விளையாட்டு வேண்டாமே!
-ஆர்.கணேசன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கொரோனாவை காரணமாகக் கூறி கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரிகளில், இறுதி செமஸ்டர் தவிர்த்து, மற்றத் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்துவோர் அனைவரும், தேர்வு எழுதாமலேயே, 'ஆல் பாஸ்' செய்யப்படுவர் என, தமிழக அரசு அறிவித்தது.இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.மாணவர்கள் நலன் கருதி, இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது என, அரசு கூறுகிறது. இதனால், மாணவர்களின் கற்றல் தரம் குறையும் என, கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது, தேர்வுகள் நடத்தாமல், 'அரியர்' தேர்வு முடிவுகளை வெளியிட, பல்கலைகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.இந்த களேபரங்களுக்கு நடுவே, மாணவர்களின் எதிர்கால கல்வி நிலைக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்பதை, கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்துக் கல்லுாரி மற்றும் விடுதிகள், இன்று திறக்கப்பட உள்ளன.தேர்வு எழுதாமல், பாஸ் பண்ணலாம் என்ற மனப்பான்மை, மாணவர்களுக்கு வரவேக் கூடாது. கற்றலில், சுய மதிப்பீடு செய்வதற்கு, தேர்வு முறை அவசியம் என்பதை, ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.தமிழக அரசு, இதுபோன்ற, ஆல் பாஸ் விளையாட்டை தவிர்த்து, கல்வியின் தரத்தை மேலும் உயர்த்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE