ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்த ராமநாதபுரத்திற்கு திறக்கப்பட்ட நீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் முதல் போக பாசனத்திற்கு ஆகஸ்ட் 30 முதல் கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தி சில நாட்கள் கால்வாய் வழியாக திறந்தும், சில நாட்கள் நிறுத்தியும் வைப்பது தொடர்கிறது. சிவகங்கை, ராமநாத புரம் மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீருக்கு ஆற்றின் வழியாக 21 நாட்களில் 1792 மி.கன அடிநீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டதால் நவ.30 முதல் 1093 மி.கன அடிநீர் ஆற்றின் வழியாக வெளியேற்றப்பட்டு நேற்று காலை நீர் நிறுத்தப் பட்டது.
குடிநீருக்கு மட்டும் வினாடிக்கு 69 கன அடிநீர் வெளியேறியது. பொதுப்பணித்துறையினர் தெரிவித்ததாவது: ராமநாதபுரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு நீர் வெளியேறியதும் நேற்று காலை நிறுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு இன்று முதல் டிச.12 வரை 449 மி.கன அடிநீர் திறந்து விடப்பட்டு பின்னர் நிறுத்தப்படும். முறைப்பாசன அடிப்படையில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் வழியாக நாளை மீண்டும் திறக்கப்படும். நேற்று அணை நீர் மட்டம் 57.22 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1273 கன அடியாக இருந்தது.--
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE