கிள்ளை : கொரோனா தொற்றுக்கு பிறகு இன்று பிச்சாவரம் சுற்றுலா மையம் திறக்கப்படுவதால், படகுகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு, சதுப்பு நிலக்காடுகளுடன், இயற்கை சூழலுடன், மருத்துவம் குணம் கொண்ட மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்துள்ளதால், சுற்றுலா மையத்திற்கு தினமும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிச்சாவரம் சுற்றுலா மையம் கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி மூடப்பட்டது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர், தங்களுக்கு சொந்தமான மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள் சீரமைக்கப்பட்டு பெயிண்ட் அடித்து சீரமைத்தனர். இந்நிலையில், மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், 10 மாதங்களுக்க பிறகு இன்று பிச்சாவரம் சுற்றுலா மையம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வனக்காடுகளுக்கு படகில் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு கவசம் சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மைய வளாகம், கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்ட பகுதிகள் சுத்தம் செய்யப்படுகிறது.கன மழை காரணமாக படகுகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அவற்றை ஓட்டுநர்கள் வெளியேற்றி, சுத்தம் செய்து வருகின்றனர். படகு சவாரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். 60 வயதுக்கு மேல், 10 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் சுற்றுலா மையம் வருவதை தவிர்க்க வேண்டும்.
சுற்றுலா பயணிகளுக்கு, காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டும். கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன், படகு சவாரி செய்ய அனுமதிக்கப்படுவர் என, சுற்றுலா மைய மேலாளர் தினேஷ் தெரிவித்தார்.விடுதி, ஓட்டலை திறக்க கோரிக்கை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், இயங்கி வந்த ஓட்டல், தங்கும் விடுதி தனியாரிடம் லீசுக்கு விடப்பட்டது. தற்போது மீண்டும் ஓட்டல், தங்கும் விடுதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் ஒப்படைக்கப்பட்டு, பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, சுற்றுலா பயணிகள் சாப்பாட்டிற்கும், தங்குவதற்காகவும் சிதம்பரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, பராமரிப்பு பணியை விரைந்து முடித்து, ஓட்டல், தங்கும் விடுதியை உடனடியாக திறக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE