மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன்: சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா, நேர்மையானவர். யாரோ ஒருவர் கொடுத்த புகாருக்காக, அவர் மீது விசாரணை நடத்த, ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன்.
'டவுட்' தனபாலு: சுரப்பா நேர்மையானவர் என்பதை அறிந்துக் கொள்ள, நடிகர் கமலுக்கு இத்தனை நாட்கள் ஆனதோ; அவரின் நேர்மையை பரிசோதிக்க, தனியார் உளவு அமைப்பை பணியில் ஈடுபடுத்தியிருப்பாரோ என்ற, 'டவுட்'டுகள் சாமானியர்களுக்கும் வருகிறது. எப்படியோ, எதிர்க்கட்சிகளின் மாயவலையில், கமல் சிக்காமல் இருந்த வரைக்கும் நல்லது தான்!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: எதிர்க்கட்சிகள் மீது தேவையற்ற அவதுாறுகள் பேசுவதை தவிர்த்து, ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்தியக் குழுவினரிடம், புயல் பாதிப்பு முழு நிலவரத்தை எடுத்துச் சொல்லி, தேவையான நிவாரண உதவியை பெற வேண்டும்.
'டவுட்' தனபாலு: எதிர்க்கட்சிகள் சும்மா இருந்தால், அரசும் சும்மா இருக்கும். ஆனால், இல்லாத விவகாரங்களை எழுப்பி, நாள்தோறும் எதிர்க்கட்சிகள் குடைச்சல் கொடுப்பதால், இ.பி.எஸ்., அரசு என்ன தான் செய்யும்... உங்கள் சுருதி கொஞ்சம் குறைந்துள்ளதால், மழை நிற்கும் வரை, உங்கள் கண்டன அரசியலும் நிற்குமோ என்ற, 'டவுட்' பலருக்கும் வந்துள்ளது
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: வேளாண் சட்டங்களுக்குஎதிராக, டில்லியில் போராடும் விவசாய அமைப்புகள், நாளை, இந்தியா முழுதும், முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அப்போராட்டத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதரவு தெரிவிக்கிறது. மேலும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, மாவட்டத் தலைநகரங்களில், வரும், 10ல், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
'டவுட்' தனபாலு: 'நாளை நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு: அதன் பின், தனியாக, 10ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என அறிவிப்பது, கட்சியின் விளம்பரத்திற்காகத் தான் என்பது, 'டவுட்' இன்றி அனைவருக்கும் தெரிகிறது. ஏனெனில், கடந்த, 5ல் நடந்த, தி.மு.க., போராட்டத்திலேயே உங்கள் கட்சியும் கலந்திருக்கலாம். எல்லா கூட்டணிக் கட்சிகளும், முறை வைத்து, போராட்டங்களில் ஈடுபட்டு, நாட்டை குட்டிச்சுவராக ஆக்க முயற்சிப்பது, இதன் மூலம் நன்றாகத் தெரிய வருகிறது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE