துாத்துக்குடி: 'பா.ஜ., வேல் யாத்திரை நிறைவு விழா இன்று, திருச்செந்துார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதையொட்டி, யாத்திரையில் கொண்டு வரப்பட்ட ஐம்பொன் வேலை, நேற்று கோவில் உண்டியலில், மாநில தலைவர் முருகன் காணிக்கையாக செலுத்தினார்.
தமிழக பா.ஜ., சார்பில், நவ., 6ல், திருத்தணியில் வேல் யாத்திரை துவங்கியது. முருகனின் அறுபடை வீடுகள் வழியாக, திருச்செந்துாரில் இன்று, நிறைவு விழா நடக்கிறது.இதையொட்டி, பா.ஜ., மாநில தலைவர் முருகன், நேற்று திருச்செந்துார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.யாத்திரையில் கொண்டு வரப்பட்ட, 3 அடி ஐம்பொன் வேலை, கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தினார்.
அவர் கூறியதாவது:தமிழ் கடவுள் முருகனை போற்றும் கந்த சஷ்டி கவசத்தை, கருப்பர் கூட்டம் ஆபாசமாக திரித்து வெளியிட்டது. இதன் பின்னணியில், தி.மு.க., உள்ளது. இதை மக்களுக்கு கொண்டு செல்வதற்காக, வேல் யாத்திரை துவங்கினோம். மக்கள் சிறப்பாக வரவேற்பளித்தனர். யாத்திரை நிறைவு நிகழ்ச்சி, திருச்செந்துாரில் இன்று நடக்கிறது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அரசு விதிமுறைப்படி விழா நடக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
போலீஸ் அனுமதி மறுப்பு
இதற்கிடையே, திருச்செந்துாரில் பொது இடத்தில், வேல் யாத்திரை நிறைவு விழா நடத்த, போலீசார் அனுமதி மறுத்தனர். மண்டபங்களில் தங்க, கட்சியினரை அனுமதிக்கவில்லை. திருச்செந்துாருக்குள் கட்சியினர் வருவதை தடுக்க, போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளனர்.பொது இடத்திற்கு பதிலாக, திருச்செந்துார் கே.டி.எம்., மண்டபத்தில், காலை, 11:00 மணிக்கு விழா நடக்க உள்ளதாக, எஸ்.பி., ஜெயகுமார் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE