கடலூர் மாவட்டத்தில் வெள்ளநீர்.. வடிகிறது! திரும்புகிறது இயல்பு வாழ்க்கை| Dinamalar

தமிழ்நாடு

கடலூர் மாவட்டத்தில் வெள்ளநீர்.. வடிகிறது! திரும்புகிறது இயல்பு வாழ்க்கை

Added : டிச 07, 2020
Share
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நிவர், புரெவி புயல் காரணமாக தொடர்ந்து ஒரு வாரம் பெய்த கனமழையால் வெள்ளக்காடான பகுதிகளில் இருந்து தண்ணீர் வடிந்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.நிவர் புயல் காரணமாக கடந்த 25ம் தேதி இரவு கடலுார் மாவட்டத்தில் கன மழை கொட்டி தீர்த்தது. அதையடுத்து புரெவி புயல் காரணமாக கடலுார் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக
 கடலூர் மாவட்டத்தில் வெள்ளநீர்.. வடிகிறது! திரும்புகிறது இயல்பு வாழ்க்கை

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நிவர், புரெவி புயல் காரணமாக தொடர்ந்து ஒரு வாரம் பெய்த கனமழையால் வெள்ளக்காடான பகுதிகளில் இருந்து தண்ணீர் வடிந்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.

நிவர் புயல் காரணமாக கடந்த 25ம் தேதி இரவு கடலுார் மாவட்டத்தில் கன மழை கொட்டி தீர்த்தது. அதையடுத்து புரெவி புயல் காரணமாக கடலுார் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, லால்பேட்டை, குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடானது.

600க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீர் சூழ்ந்து தீவாக மாறியது. இதனால், மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.மாவட்டத்திலுள்ள வீராணம் ஏரி, பெருமாள் ஏரி, வாலாஜா ஏரிகள் நிரம்பி வழிந்தன. பாதுகாப்பு கருதி பெருமாள், வீராணம் ஏரி, வாலாஜா ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிடப்பட்டு, தண்ணீரால் சூழப்பட்ட கிராம மக்கள் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோரை பாதுகாப்பாக வெளியேற்றி 382 முகாம்களில் தங்க வைத்தனர்.

இதற்கிடையே கடந்த 2 நாட்களாக மழை குறைந்துள்ளதால், வெள்ளக்காடான பகுதிகளில் இருந்து தண்ணீர் வடிந்து வருகிறது. அதே சமயத்தில், தண்ணீர் வடியாமல் தேங்கியுள்ள பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மோட்டார் வைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.பல கிராமங்களில் தண்ணீர் வடிந்து வருவதால் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.

ஆனால் சம்பா நடவு செய்த ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலத்தில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. கடலுார் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமுதவள்ளி, ராஜேஷ், விசுமகாஜன் ஆகிய சிறப்பு திகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர்.

எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் தலைமையிலான மீட்பு குழுவினர் குறிஞ்சிப்பாடி, குமராட்சி, சிதம்பரம் பகுதிகளில் தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டு கரைசேர்த்துள்ளனர். கடலுார் மாவட்டத்தில் மொத்தமுள்ள 228 பொதுப்பணித்துறை ஏரிகளில் 149 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. கூடுதலாக ஏரிக்கு வரும் தண்ணீர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு வருகிறது.

சிதம்பரம் பகுதி மக்கள் அவதி:

சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் ஓரிரு இடங்களில் தண்ணிரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், பல பகுதிகளிலில் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து, பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் புகும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.இப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X